மிஃராஜ் நபித்துவத்திற்கு முன்னர் நடந்ததா?

மிஃராஜ் நபித்துவத்திற்கு முன்னர் நடந்ததா?
ஊரிய முறையில் விளங்காமல் வில்லங்கம் பன்னுவது முறையா

صحيح البخاري (الطبعة الهندية) – (1 ஃ 1724)

 

3570 – حَدَّثَنَا إِسْمَاعِيلُ قَالَ حَدَّثَنِي أَخِي عَنْ سُلَيْمَانَ عَنْ شَرِيكِ بْنِ عَبْدِ اللهِ بْنِ أَبِي نَمِرٍ سَمِعْتُ أَنَسَ بْنَ مَالِكٍ يُحَدِّثُنَا عَنْ لَيْلَةَِ أُسْرِيَ بِالنَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْ مَسْجِدِ الْكَعْبَةِ جَاءَهُ (جَاءَ) ثَلَاثَةُ نَفَرٍ قَبْلَ أَنْ يُوحَى إِلَيْهِ وَهُوَ نَائِمٌ فِي مَسْجِدِ الْحَرَامِ فَقَالَ أَوَّلُهُمْ أَيُّهُمْ هُوَ فَقَالَ أَوْسَطُهُمْ هُوَ خَيْرُهُمْ وَقَالَ آخِرُهُمْ خُذُوا خَيْرَهُمْ فَكَانَتْ تِلْكَ فَلَمْ يَرَهُمْ حَتَّى جَاءُوا لَيْلَةً أُخْرَى فِيمَا يَرَى قَلْبُهُ وَالنَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ نَائِمَةٌ عَيْنَاهُ وَلَا يَنَامُ قَلْبُهُ وَكَذَلِكَ الْأَنْبِيَاءُ تَنَامُ أَعْيُنُهُمْ وَلَا تَنَامُ قُلُوبُهُمْ فَتَوَلَّاهُ جِبْرِيلُ ثُمَّ عَرَجَ بِهِ إِلَى السَّمَاءِ

 

நபி(ச) அவர்கள் விண்ணுலகப் பயணத்திற்காக கஃபாவிலிருந்து பைதுல் முகத்தஸிற்கு அழைத்துச் செல்லப்பட்டார்கள். பின்னர் அங்கிருந்து ஏழு வானங்கள் கடந்து அழைத்துச் செல்லப்பட்டார்கள். நபியவர்களின் நபித்துவ வாழ்வில் நடந்த மிகப் பெரும் அற்புதங்களில் ஒன்றாக இந்த இஸ்ரா-மிஃராஜ் நிகழ்வு அமைந்துள்ளது. இந்த நிகழ்ச்சி நபித்துவத்துக்குப் பின்னர் ஹிஜ்ரத்திற்கு முன்னர் நடந்ததாகும். இதில் யாருக்கும் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால், இது குறித்துப் பேசும் புஹாரி, முஸ்லிம் போன்ற கிரந்தங்களில் இடம் பெற்ற ஹதீஸ் ஒன்று இது அவருக்கு வஹீ அருடப்பட முன்னர் நடந்ததாகக் கூறுகின்றதே! இது முரண்பாடல்லவா? இதை ஏற்றுக் கொண்டால் இஸ்ரா-மிஃராஜ் சம்பந்தப்பட்ட மற்ற ஹதீஸ்களையெல்லாம் நிராகரிக்க வேண்டி ஏற்படும். எனவே, இந்தச் செய்தி புஹாரியில் பதிவாகி இருந்தாலும் இதை மறுக்க வேண்டும் என்று கருத்து முன்வைக்கப்பட்டு வருகின்றது. இது குறித்து சில விளக்கங்களை நோக்குவோhம்.
அப்துல்லாஹ் இப்னு அபீ நமிர்(ரஹ்) அறிவித்தார். எங்களிடம் அனஸ் இப்னு மாலிக்(ரலி),அவர்கள் நபி(ஸல்) அவர்கள் கஅபாவின் பள்ளிவாசலிலிருந்து (விண்ணுலகப் பயணத்திற்காக) அழைத்துச் செல்லப்பட்ட இரவைக் குறித்துப் பேசினார்கள்: நபி(ஸல்) அவர்களுக்கு வஹீ (இறைச் செய்தி) வருவதற்கு முன்னால் அவர்கள் மஸ்ஜிதுல் ஹராமில் தூங்கிக் கொண்டிருந்த போது (வானவர்களில்) மூன்று பேர் அவர்களிடம் வந்தார்கள். அவர்களில் முதலாமவர், ‘இவர்களில் அவர் யார்?’ என்று கேட்டார். அவர்களில் நடுவிலிருந்தவர், ‘இவர்களில் சிறந்தவர்’ என்று பதிலளித்தார். அவர்களில் இறுதியானவர், ‘இவர்களில் சிறந்தவரை எடுத்து வாருங்கள்’ என்று கூறினார். அன்றிரவு இது மட்டும் தான் நடந்தது. மற்றுமொரு இரவில் நபி(ஸல்) அவர்கள் தங்களின் உள்ளம் பார்க்கிற நிலையில் -(உறக்கநிலையில்)- அம்மூவரும் வந்தபோது அவர்களைக் கண்டார்கள். நபி(ஸல்) அவர்களின் கண்கள் இரண்டும் தான் உறங்கும்; அவர்களின் உள்ளம் உறங்காது. இறைத் தூதர்கள் இப்படித்தான். அவர்களின் கண்கள் உறங்கும்; அவர்களின் உள்ளங்கள் உறங்க மாட்டா. ஜிப்ரீல்(அலை) அவர்கள், நபி(ஸல்) அவர்களுக்குப் பொறுப்பேற்று அவர்களைத் தம்முடன் அழைத்துக் கொண்டு வானத்தில் ஏறிச் சென்றார்கள்.
(புஹாரி: 3570)
இதே செய்தி புஹாரி 7517, 3370, முஸ்லிம் 432 இடம் பெற்றுள்ளது. இதில் அவருக்கு வஹீ அறிவிக்கப்படுவதற்கு முன்னர் என்ற வார்த்தை இடம் பெற்றுள்ளது. இந்த ஹதீஸை ஏற்றுக் கொண்ட முஸ்லிம் உலகில் யாராவது இஸ்ரா-மிஃராஜ் என்பது நபித்துவத்திற்கு முன்னர் நடந்தது என்று 14 நூற்றாண்டில் எப்போதாவது வாதிட்டதுண்டா? அல்லது நபித்துவத்திற்குப் பின்னர்தான் நடந்தது என்று வரும் செய்திகளை மறுத்ததுண்டா?

இந்த ஹதீஸை ஏற்றுக் கொண்ட சமூகம், ஹதீஸ்துறை அறிஞர்களின் வழிகாட்டல் பிரகாரம் எந்தக் குழப்பமும் இல்லாமல் இந்த ஹதீஸைப் புரிந்து கொண்டதால்தான் மிஃராஜ் நபித்துவத்திற்கு முன்னர் நடந்ததா? பின்னர் நடந்ததா? என்று சர்ச்சை செய்யவில்லை. சமூகம் ஏகோபித்து அது நபித்துவத்திற்குப் பின்னர் நடந்த நிகழ்வு என்றே ஏற்று வந்தது. இது எப்படி நடந்தது!

இந்த ஹதீஸை ஏற்றால் மிஃராஜ் பற்றிப் பேசும் மற்றும் பல ஹதீஸ்களை நிராகரிக்கும் நிலை ஏற்படும் என்று கூறுகின்றனர். அப்படி ஒரு சிந்தனையே யாருக்கும் வரவில்லை என்றால் இவர்கள் வீணான கற்பனையிலும் ஹதீஸ்களைத் தவறாகப் புரிந்து கொள்வதனாலும்தான் இப்படிக் குழப்பமான கருத்துக்களைக் கூறி குதர்க்க வாதம் புரிகின்றனர் என்பது தெளிவாகின்றது.

இது குறித்து ஹதீஸ் கலை நூற்களில் கூறப்பட்டுள்ள விபரங்கள் என்ன என்பதை நோக்குவோம்.

இது குறித்து அறிஞர் காழி இயாழ்(ரஹ்) அவர்களது ‘இக்மாலுல் முஅல்லிம்’ எனும் முஸ்லிம் கிரந்தத்திற்கான விரிவுரையில்,

 قوله : (وذلك قبل أن يوحى إليه) : وهو غلطٌ لم يوافق عليه ، فإن الإسراَ أقل ما قيل فيه : إنه كان بعد مبعثه بخمسة عشر شهراً إكمال المعلم شرح صحيح مسلم – للقاضي عياض – (1 ஃ 325)

 

‘இது வஹீ அருளப்படுவதற்கு முன்னர் என்று கூறப்படுவது தவறானதாகும். இது விடயத்தில் அவருடன் யாரும் உடன்படவில்லை. ஏனெனில், இஸ்ரா என்பது எப்போது நடந்தது என்பது பற்றிக் கூறப்படும் கருத்துக்களில் ஆகக் குறைந்தது நுபுவ்வத்திற்குப் பின்னர் 15 மாதங்களுக்குப் பின்னர் நடந்தது என்பதாகும்.’
(இக்மாலுல் முஅல்லிம் ஷரஹ் ஸஹீஹ் முஸ்லிம்: 1ஃ225)

இந்த வார்த்தை தவறானதாகும். இந்த ஹதீஸில் இடம் பெறும் இந்த வார்த்தை தவறானது எனச் சில அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர்.இந்த அறிவிப்பை வைத்து மிஃராஜ் நபித்துவத்திற்கு முன்னர் நடந்தது என யாரும் கூறியதில்லை அப்படியிருக்கையில் இதை ஏற்றால் ஏனைய ஹதீஸ்களை மறுக்க வேண்டி ஏற்படும் என வாதிப்பது ஆச்சர்யமாக உள்ளது.

இந்தத் தவறு இந்த ஹதீஸின் அறிவிப்பாளர் வரிசையில் இடம்பெறுகின்ற ‘சரீக்’ எனும் அறிவிப்பாளர் மூலம் நிகழ்ந்துள்ளது. இது குறித்து ‘அந்தீபாஜ் அலா முஸ்லிமின்’ என்ற நூலில் விரிவாகப் பின்வருமாறு பேசப்படுகின்றது.

இந்த நூலில் சரீக்கின் மேற்படி வாசகம் மறுக்கப்பட்டதாகும். ஏனெனில், இஸ்ரா என்பது அவர் நபித்துவத்தைப் பெற்ற பின்னர் நடந்ததாகும். அந்த இரவுதான் அவருக்கு தொழுகை கடமையாக்கப்பட்டது. இந்த ஹதீஸில் இடம் பெறும் இந்த வார்த்தை காரணமாக இப்னு ஹஸ்ம் இந்த ஹதீஸை இட்டுக்கட்டப்பட்டது என்று கூறுவதோடு இதைப் பதிவு செய்தமைக்காக புஹாரி, முஸ்லிம் ஆகிய இமாம்களையும் குறை காண்கின்றார். இப்னு ஹாளிர் இதற்கு பதிலளிக்கும் போது ‘யாருமே ‘சரீக்’ எனும் (இந்த ஹதீஸை அறிவித்த) அறிவிப்பாளரை இட்டுக்கட்டுபவர் என்று குறை கூறவில்லை. மாறாக, ஜரஹ் வத்தஃதீல் திறனாய்வுத் துறை கலையின் அறிஞர்கள் இவரை ஏற்றுக் கொண்டதுடன் இவரது அறிவிப்புக்களை ஆதாரமாகவும் கொண்டுள்ளனர். ஷரீக் இந்த ஹதீஸை அறிவிக்கும் போது இந்த வார்த்தையில் தவறு விட்டுள்ளதால் முழு ஹதீஸ்களும் இதற்காக மறுக்கப்பட வேண்டியதில்லை என்று கூறலாம்.என்று குறிப்பிடுகிறார் (அத்தீபாஜ் அலா முஸ்;லிமின்: 1Æ198)

ஷரீக் இந்த வார்த்தையை ஏன் சொன்னார் என்பது பற்றி விபரிக்கும் போது,

« வஹீ அறிவிக்கப்பட்ட பின்னர் என அவர் சொல்ல நினைத்திருக்கலாம். ஆனால், அவரையும் அறியாமல் ‘முன்னர்’ என்ற வார்த்தை அவரது நாவில் இருந்து வெளிப்பட்டிருக்கலாம்.

« தொழுகை கடமை என்று வஹீ அறிவிக்கப்பட முன்னர் என அவர் கருதி அந்த வார்த்தையைப் பயன்படுத்தியிருக்கலாம்.

« இஸ்ரா அழைத்துச் செல்லப்படுவது பற்றி அறிவிக்கப்பட முன்னர் என்று அவர் கருதியிருக்கலாம். அதாவது, முன்னறிவித்தல் எதுவுமில்லாமல் நபியவவர்கள் திடீரென அழைத்துச் செல்லப்பட்டார்கள் என்பதை அவர் இந்த வார்த்தையினூடாகக் கூற முன்வைத்திருக்கலாம் என்றெல்லாம் விளக்கம் சொல்லப்பட்டுள்ளது. இப்படியெல்லாம் கூறப்பட்ட காரணத்தில்தான் ஆயிரம் வருடங்களாக இந்த ஹதீஸ்கள் புஹாரி, முஸ்லிம் கிரந்தங்களில் இருந்தும் கூட உலக முஸ்லிம்களில் ஒருவரும் இதனால் குழப்பமடைந்து இஸ்ரா என்பது நபித்துவத்திற்கு முன்னர் நடந்தது என்று வாதிடவில்லை.

இது குறித்து இமாம் நவவி முஸ்லிமின் விளக்கவுரையில் குறிப்பிடும் போது இந்தப் பாடத்தில் இடம்பெறும் ‘சரீக்’ அறிவிக்கும் இந்த அறிவிப்பில் பல குறைகள் உள்ளன. உலமாக்கள் அதனை மறுத்துள்ளனர். இமாம் முஸ்லிம் இந்த ஹதீஸை அறிவிக்கும் போதே ‘இதில் சில விடயம் முற்படுத்தப்பட்டுள்ளது, கூட்டப்பட்டுள்ளது, குறைக்கப்பட்டுள்ளது என ஹதீஸின் இறுதியில் குறிப்பிட்டு எச்சரிக்கை செய்துவிடுகின்றார் என்று கூறுகின்றார்.
(ஷரஹ் ஸஹீஹ் முஸ்லிம்: 2Æ209)

புஹாரியின் விரிவுரை உம்ததுல் காரீயில்,

 عمدة القاري شرح صحيح البخاري – (24 ஃ 118)

 قوله قبل أن يوحى إليه قيل ليس في أكثر الروايات هذه اللفظة

 அதிகமான அறிவிப்புக்களில் வஹீ அருளப்பட முன்னர் என்ற இந்த வாசகமும் இல்லை என்று கூறப்பட்டுள்ளது.

(உம்ததுல் காரீ ஷரஹ் ஸஹீஹ் முஸ்லிம்: 24Æ118)

இவ்வாறு வஹீ வருவதற்கு முன்னர் என்ற வார்த்தையைச் சிலர் தவறு என்று கூறியுள்ளனர். அல்லது அது நபித்துவத்தைக் குறிக்காது என்று விளக்கம் சொல்லியுள்ளனர். எனவே, இந்த செய்தியைப் பார்த்து இதுவரை யாருமே இஸ்ரா என்பது நபித்துவத்திற்கு முன்னர் நடந்தது என விபரிக்கவில்லை.

தவறு நடந்துள்ளதே!
எது எப்படியிருந்தாலும் புஹாரி, முஸ்லிம் ஹதீஸ் கிதாபுகளிலேயே பொய்யும், இட்டுக்கட்டும் இடம் பெற்றுள்ளது என்பது உறுதியாகின்றதே. நல்ல அறிவிப்பாளர்கள் அறிவித்தால் அதை மறுக்கக் கூடாது என்பதற்கு இது முரணாக உள்ளதே என்று வாதிக்கலாம்.

தவறும் இட்டுக்கட்டுதலும்:
நல்ல அறிவிப்பாளர்கள் என ஹதீஸ் கலை அறிஞர்களால் அடையாளம் காணப்பட்டவர்களும் மனிதர்கள்தான். மனிதர்கள் என்ற அடிப்படையில் அவர்களும் தவறு விடலாம். சில செய்திகளை மறந்துவிடலாம். சில செய்திகளை மாற்றிச் சொல்லிவிடலாம். முன்னால் நடந்ததைப் பின்னால் என்றும் பின்னால் நடந்ததை முன்னால் நடந்தது என்றும் வலதை இடது என்றும் இடதை வலது என்றும் கூறிவிடலாம். மனிதன் என்ற அடிப்படையில் இப்படியான தற்செயலாக இடம்பெறும் தவறுகள் தவிர்க்க முடியாதது. இதை ஹதீஸ் கலை அறிஞர்கள் ஏற்றே உள்ளனர். இதனால்தான் நல்ல அறிவிப்பார்கள் அறிவிக்கும் அறிவிப்புக்களும் ஆய்விற்குட்படுத்தப்பட்டுள்ளது.

ஆனால், ஆதாரபூர்வமான அறிவிப்பாளர்கள் என்று இனம் காணப்பட்டவர்கள் திட்டமிட்டு நபி(ச) அவர்கள் பெயரில் ஹதீஸை இட்டுக்கட்டுவார்களா என்றால் இல்லையென்பதே பதிலாகும். நபி(ச) அவர்களுக்கு சூனியம் செய்யப்பட்டது. மூஸா நபியும் மலக்குல் மவ்த்தும் சம்பந்தப்பட்ட ஹதீஸ், ஸாலிம்(வ) சம்பந்தப்பட்ட ஹதீஸ் போன்றவற்றை ஒட்டுமொத்தமாக பொய், இட்டுக்கட்டப்பட்டது என்று மறுப்பதற்கு அறிவிப்பாளர்களிடம் மனிதன் என்ற அடிப்படையில் ஏற்பட்ட இது போன்ற சின்னச் சின்னத் தவறுகளைச் சான்றாகக் கொண்டு வருகின்றனர். இது தவறாகும். நல்லவர்கள் ஞாபக சக்தி உள்ளவர்கள் என இனங்காணப்பட்ட அறிவிப்பாளர் மனிதன் என்ற அடிப்படையில் அறிவிக்கும் செய்திகளில் சின்னச் சின்னத் தவறுகள் நடக்கலாம். ஆனால், நல்லவர்கள் என அறியப்பட்டவர்கள் திட்டமிட்டு ஒரு ஹதீஸை இட்;டுக்கட்ட மாட்டார்கள். இரண்டையும் இவர்கள் ஒன்றாகக் குழப்புவது மட்டுமல்லாமல் மக்களையும் குழப்பத்தில் ஆழ்த்துகின்றனர்.

தெளிவான செய்திகள் இருக்க இது போன்ற விடயங்களைப் பிடித்துக் கொண்டு வித்தியாசமான விளக்கங்களை முன்வைத்துவருபவர்களின் உள்ளங்களின் விஷமத்தனதும் வீம்புத்தனமும் குடி கொண்டிருப்பதற்கு இதுவே ஆதாரமாகும்.

இந்த ஹதீஸில் பயன்படுத்தப்பட்ட வஹீ வருவதற்கு முன்னர் என்ற வார்த்தையைப் புரிந்து கொள்வதில் மற்றுமொரு வார்த்தைதான் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. அது ‘லைலதன் உஹ்ரா’ என்ற வார்த்தையாகும். இந்த வார்த்தைக்கு ‘அடுத்த இரவு’ என்றும் அர்த்தம் செய்யலாம். மற்றுமோர் இரவு என்றும் அர்த்தம் செய்யலாம். அடுத்த இரவு என்று அர்த்தம் செய்தால் முன்னர் சொல்லப்பட்ட செய்தி நடந்த மறுநாள் பின்னர் சொல்லப்படும் செய்தி நடந்துள்ளது என்பது அர்த்தமாகும். அப்படி அர்த்தம் எடுக்கும் போதுதான் குறித்த குழப்பம் ஏற்படுகின்றது.

இதற்கு மாற்றமாக ‘மற்றுமோர் இரவு’ என்று அர்த்தம் எடுத்தால் முன்னர் சொன்ன செய்தி நடந்து முடிந்த பின்னர் சொல்லும் செய்தி நடந்துள்ளது இரண்டுக்குமிடையில் எவ்வளவு கால இடைவெளி கூட இருக்கலாம் என்பது அர்த்தமாகும். இவ்வாறு அர்த்தம் எடுக்கும் போது ‘வஹி வருவதற்கு முன்னர்’ என்பது குழப்பத்தை ஏற்படுத்தாது. வஹி வருவதற்கு முன்னர் ஒரு விடயம் நடந்துள்ளது. வந்ததன் பின்னர் மற்றுமோர் விடயம் நடந்துள்ளது என்று அர்த்தம் எடுக்கலாம். இப்போது அந்த ஹதீஸை இந்தக் கோணத்தில் அனுகிப் பாருங்கள்.

நபியவர்கள் நபித்துவத்தைப் பெற முன்னர் கனவில் மூன்று மலக்குகளைக் காண்கின்றார்கள். அவர்களில் ஒருவர் ‘இவர் யார்?’ என்று கேட்க, மற்றவர் ‘இவர் உலகில் சிறந்தவர்’ என்று கூறுகின்றார். மற்றவர் ‘இவர்களில் சிறந்தவரை எடுத்து வாருங்கள்’ என்று கூறுகின்றார். அங்கு இஸ்ராவோ, மிஃராஜோ நடக்கவில்லை.

குறித்த இந்த மூன்று மலக்குகளையும் நபியவர்கள் மீண்டும் மிஃராஜ் இரவில்தான் காண்கின்றார்கள். முதலில் கண்டது நபித்துவத்திற்கு முற்பட்டது. ஆனால், மிஃராஜிற்கு எடுத்துச் செல்லப்பட்டது நபித்துவத்திற்குப் பின்னராகும். முன்னர் கண்டதற்கும் பின்னர் குறித்த மலக்குகளைக் கண்டதற்குமிடையில் பல வருட இடைவெளி உள்ளது. ‘மற்றுமொறு இரவில்’ என்பதை அடுத்த இரவு என்று அர்த்தம் எடுத்ததால்தான் இந்தக் குழப்பம் எழுந்தது.

லைலதன் உஹ்ரா என்பதற்கு ‘மற்றுமொரு இரவு’ என அர்த்தம் செய்ய இடமிருக்கும் போது குழப்பம் வரும் விதத்தில் மட்டும்தான் அர்த்தம் செய்வோம் என அடம்பிடித்து அர்த்தம் செய்வது அர்த்தமற்றதும் அடிப்படையற்ற தன்மையுமாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.