பெண்ணே பெண்ணே! – (தொடர் 7)

ஒழுங்கீனம் வேண்டாம் கண்ணே!

சில பெண்கள் பண்பாடோ, நாகரீகமோ இல்லாமல் நடந்து கொள்வதைக் காணலாம். இவர்களின் இத்தகைய பண்பாடற்ற நாகரீக மற்ற இயல்புகளும், நடத்தைகளும் அடுத்தவர்களுக்கு பெருத்த அசௌகரியத்தை அளித்து வருகின்றன. எனினும் இத்தகைய பெண்கள் இவ் இழி குணங்களின் பாதிப்பை உணர்வதில்லை.இவர்களின் இங்கிதமற்ற நடத்தைகளால் அடுத்த சமூகம் முஸ்லிம் சமூகத்தையே தரக்குறைவாக எடை போடும் நிலையும் ஏற்படுவதுண்டு.

சில பெண்கள் பயணத்தின் போது பக்கத்திலிருக்கும் பெண்களுடன் பேசிக் கொண்டு வருவர். அது அந்த பஸ்ஸில் இருக்கும் அனைவருக்கும் கேட்கும். குடும்பப் பிரச்சனை, பக்கத்து வீட்டுப் பிரச்சனையென்று அலசிக் கொண்டு வருவர். அடுத்தடுத்த இருக்கைகளில் இருப்பவர்கள் ஏளனமாகப் பார்ப்பது கூட இவர்களுக்குப் புரிவதில்லை.
சில நேரங்களில் பயணங்களில் இருக்கும் போது தொலைபேசி அழைப்பு வந்தால் ஊருக்கே கேட்க உரத்துக் கத்துவார்கள். இவர்களின் இத்தகைய நடத்தைகளால் முஸ்லிம்கள் நாகரிகம், பண்பாடு அற்றவர்கள் என்ற எண்ணப் பதிவு அடுத்தவர்களின் மனதில் ஆழமாகப் பதிந்துவிடுகின்றது.
ஒருவரது வீட்டுக்குள் நுழைவதாக இருந்தால் ஸலாம் சொல்லி பதில் வந்ததன் பின்னர் அவர்கள் உள்ளே வாருங்கள் என கூறிய பின்னரே உள்ளே நுழைய வேண்டும். சில பெண்கள் திறந்த வீட்டுக்குள் எதுவோ நுழைவது போன்று நுழைந்து விடுவர். வீட்டில் இருப்பவர்களுக்கு முன்னால் போய் நிற்கும் வரை இவர்கள் உள்ளே வந்தது அவர்களுக்குத் தெரியாதிருக்கும்.
சிலர் “மாமி… வேலையா” என்று கேட்டுக் கொண்டே அடுப்பங்கரை வரை வந்துவிடுவர். வீடென்பது அவரவருக்குரிய அமைதிக்குரிய இடமாகும். அவரவர் தத்தமது இல்லத்தில் எந்த நிலையில் இருப்பர் என்று கூறவே முடியாது. எனவே, ஸலாம் கூறி அனுமதி பெற்றுத்தான் உள்ளே நுழைய வேண்டும். இது பற்றி அல் குர்ஆன் கூறும் போது,
“நம்பிக்கை கொண்டோரே! உங்கள் வீடுகள் அல்லாத வேறெந்த வீடுகளிலும் நீங்கள் அனுமதி கோராமலும், அதில் உள்ளோருக்கு ஸலாம் கூறாமலும் நுழைய வேண்டாம். நீங்கள் உபதேசம் பெறுவதற்கு இதுவே உங்களுக்குச் சிறந்ததாகும்.” (24:27) என்று கூறுகின்றது.
இந்த வசனத்தைக் கவனத்திற் கொள்ளாமல் நடந்து கொள்வது அநாகரிகமான நடத்தை மட்டுமன்று மார்க்க வரம்பை மீறுவதாகவும் திகழ்கின்றது.
ஒருவரது வீட்டுக்கு ஒருவர் செல்கிறார். கொஞ்சம் தாமதித்து வாருங்கள் என வீட்டுக்காரர் சொல்கின்றார். இப்போது அந்த மனிதர் திரும்பி வந்தாக வேண்டும். இவன் “ஒரு மனிசனா? இவன்ட வீட்டுக்கு இனி நாயும் போகாது!….” என்றெல்லாம் பேசுகின்றனர். ஒருவருடைய வீட்டுக்குச் சென்று மூன்று முறை ஸலாம் கூறி பதில் கிடைக்கவில்லையென்றால் திரும்பிவிட வேண்டும். அதே வேளை ஆள் இருந்து நீங்கள் போய் பின்னர் வாருங்கள் என்றால் மறுப்போ, மனக் கசப்போ இல்லாமல் திரும்பிவிட வேண்டும். வீட்டுக்காரர்கள் என்ன நிலையில் இருக்கிறார்கள் என்பது எமக்குத் தெரியாது. எனவே இதனை ஒரு குறையாகவே எடுத்துக் கொள்ளக் கூடாது. இது பற்றி அல் குர்ஆன் இப்படிக் கூறுகின்றது.
“அங்கு நீங்கள் எவரையும் பெற்றுக்கொள்ள வில்லையாயின், உங்களுக்கு அனுமதியளிக்கப்படும் வரை அதில் நீங்கள் நுழைய வேண்டாம். “நீங்கள் திரும்பி விடுங்கள்!” என்று உங்களுக்குக் கூறப்பட்டால் திரும்பி விடுங்கள். இதுவே உங்களுக்கு மிகப் பரிசுத்தமானதாகும். நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் நன்கறிந்தவன்.” (24:28)
சில பெண்கள் பொருத்தமற்ற நேரங்களில் அடுத்த வீட்டுக்குச் சென்று கதைத்துக் கொண்டிருப்பார்கள். வீட்டுக்காரர்களுக்கு வெறுப்பு வெறுப்பாக வரும். ஆனால் என்ன செய்ய என்று வேண்டா வெறுப்புடன் கதைத்துக் கொண்டிருப்பார்கள். உணவு சமைக்கும் நேரம், பகல் உணவு உண்டு ஓய்வெடுக்கும் நேரம், இரவு தூங்கச் செல்லும் நேரம் என நேர-காலம் தெரியாமல் அடுத்தவர் வீட்டுக்குச் சென்று வளவள என பேசிக் கொண்டிருப்பது அருவருக்கத்தக்க நடத்தையாகும்.
சில பெண்கள் தனக்கு ஓய்வென்றால் அடுத்தவர்களுக்கும் ஓய்வாகத்தான் இருக்கும் என்ற எண்ணத்தில் கதைத்துக் கொண்டிருப்பர். இதுவும் அநாகரீகமான நடத்தையாகும். சிலர் தனக்குத் தூக்கம் போகவில்லையென்பதற்காக அடுத்தவருடன் கதைத்துக் கொண்டிருப்பர். இதில் வயது போனவர்கள் சிலருடைய நடத்தை பலருக்கு எரிச்சல் ஊட்டுவதாக அமைந்து விடுவதுண்டு. அவர்களுக்கு வீட்டில் வேலையில்லை. கதைத்துக் கொண்டிருக்க ஆளும் இல்லை. அடுத்தவர் வீட்டுக்குச் சென்று ஹாயாகக் கதைத்துக் கொண்டிருப்பார்கள். அவள் தனது வேலையையும் முடித்துக் கொள்ள முடியாமலும் இவர்களது முகத்தையும் முறித்துக் கொள்ள முடியாமல் படும் திண்டாட்டம் சொல்லிமாளாது.
சில பெண்கள் இருப்பர். பக்கத்து வீட்டு பாத்திமா பரீட்சைக்குப் படித்துக் கொண்டிருப்பாள். அங்கு போய் கதை கொடுப்பர். படிச்சால் தானே வாழ்க்கையில் முன்னேற முடியும் என்று ஒரு லெச்சர் கொடுப்பர். சில போது என்னத்தப் படிச்சிக் கிழிக்க, படிச்சி தொழிலா செய்யப்போற, பொம்பள படிச்சாலும் அடுப்பங்கரையிலதான் அவட வாழ்க்கை கழியும் என்ற தொணியில் பேசி மனதைக் குழப்புவர். நன்றாகக் கதைத்து அரைமணி, ஒரு மணி நேரத்தைத் திருடிவிட்டு நீ படி புள்ள என நடையைக் கட்டுவர். அந்த பாத்திமாவின் நெருப்பு நிமிடங்களைக் கொள்ளையடித்தது மட்டுமல்லாமல் மனதில் குழப்பத்தையும், எரிச்சலையும் உண்டுபண்ணி விட்டுப் போய்விடுவர். அடுத்தவர்களின் நிமிடங்களைக் கொள்ளையடிப்பது கொடிய குற்றம் என்பதை இவர்கள் உணருவதே இல்லை.
சில பெண்கள் ஒரே இடத்திற்கு அடிக்கடி செல்வார்கள். செல்லும் போதெல்லாம் தேவையில்லாமல் பேச்சை நீட்டிக் கொண்டு செல்வர். இதனால் அடுத்தவர் எரிச்சல்பட நேரிடும். நித்தமும் போனால் முற்றமும் சலிக்கும் என்ற முதுமொழியை இத்தகையவர்கள் நினைத்துப் பார்க்க வேண்டும்.
சில பெண்கள் இவ்வாறு போவதுடன் நிறுத்திக் கொள்ள மாட்டார்கள். “என்ன உங்கட மாமி ஒரு மாதிரியா இருக்கிறா? ஏதும் பிரச்சினையா?….” என்று கிளருவர். வீட்டுக்காரி தனி அறைக்குச் சென்றால் அப்போதும் கூடவே சென்று வீட்டு சாமான்களை உலத்த ஆரம்பிப்பாள்.
இன்னும் சில பெண்கள் அடுத்த வீட்டுக்குச் சென்று அவர்களது போனைக் கண்ட பின்னர் ஒரு கோல் எடுக்கிறேன் எனக் கேட்டு அடுத்த முனையில் இருப்பவர்களுடன் “நான் யார் பேசுறன்.. சொல்லுங்க பாப்பம்… எங்கள மறந்துட்டீங்க… எங்கட ஞாபகம் இல்லை… சமைச்சிப்பீங்களா? என்ன கறி……” என தேவையில்லாத விஷயங்களையெல்லம் பேசித் தொலைப்பார்கள். இப்போது கைபேசிகள் பரவலானதால் இந்தப் பண்பாடற்ற செயற்பாடுகளும் குறைந்துவிட்டது.
சில பெண்கள் விருந்துக்கு அழைக்கப் படாமல் செல்வதுண்டு. சிலர் கூடவே ஓரிருவரை அழைத்துக் கொண்டு செல்வதுமுண்டு. ஒருவர் விருந்துக்கு அழைத்தாலே தவிர செல்லக் கூடாது. ஒருவரது அனுமதியின்றி அவரது விருந்துக்கு இன்னுமொருவரை அழைத்துச் செல்லலாகாது.
சில பெண்கள் ஒரு வீட்டுக்கு விருந்துக்குச் செல்வர். எந்த வீட்டில் விருந்தினர்கள் வந்தாலும் வீட்டுப் பொண்களுக்கு ஒரு திடீர் டென்ஷன் உண்டாகிவிடுகின்றது. அதே நேரம் வீட்டுக்கு விருந்தினர்கள் வரும் போது வீட்டுப் பிள்ளைகளின் தொல்லைகளும் இரட்டிப்பாகிவிடுவதுண்டு. இந்த நேரத்தில் விருந்துக்கு வந்தவர்கள் கூட உதவினால் அல்லது பிள்ளைகளையாவது கவனித்துக் கொண்டால் பெரிதும் ஆறுதலாக இருக்கும். சில பெண்கள் செதுக்கி வைத்த சிலை போல இருப்பர். சமையல் பணியில் உதவவும் மாட்டார்கள். குழந்தைகளைச் சமாளிக்கவும் மாட்டார்கள். சில போது சமைக்கிற பெண்ணே தன்னுடன் ஒழுங்காகக் கதைக்கவில்லையென பின்னர் கோபித்துக் கொள்வர்.
மற்றும் சிலர் இருக்கின்றனர். திபுதிபு என திடீர் விஜயம் செய்வர். வீட்டுக்காரர்களுக்குக் கையும் ஓடாது… காலும் ஓடாது.. என்ன செய்வது என தலையைப் பிய்த்துக் கொள்வர். இந்த இலத்திரனியல் யுகத்தில் அறிவித்துவிட்டுச் செல்வதில் இவர்களுக்கு என்ன நஷ;டமோ தெரியவில்லை.
சிலர், கூப்பிட்டுவிட்டார்கள்ளூ வேன் போகிறதுளூ சும்மா போகிற வேனில் குஞ்சு குறுமான்களையெல்லாம் ஏற்றிக் கொண்டு போய் அந்த வீட்டை மட்டுமல்ல அக்கம் பக்கத்து வீடுகளையும் ஒரு கலக்குக் கலக்கிவிட்டு வந்துவிடுவர். கூப்பிட்டவர்கள் ஏண்டா கூப்பிட்டேன் என நொந்து நோகும் அளவுக்கு நடந்து கொள்வர்.
மற்றும் சிலர் பகல் சாப்பாட்டுக்கு அழைக்கப்பட்டால் பகல் மூன்று-நாலு மணிக்குச் சென்று வீட்டுக்காரர்களைக் காக்க வைத்தே வெறுக்க வைத்துவிடுவர். ஒரு முஸ்லிம் எந்த வகையிலும் அடுத்த மனிதர்களுக்கு தொல்லை கொடுக்காதவனாக இருக்க வேண்டும்.
இந்த அடிப்படையில் எமது நடவடிக்கைகள் அடுத்தவர்களுக்கு இடைஞ்சலை ஏற்படுத்தாவண்ணம் நாம் விழிப்பாக இருக்க வேண்டும். எம்மிடம் குடிகொண்டுள்ள ஒழுங்கீனமாக செயற்பாடுகளைக் களைய வேண்டும். எமக்காக என்றில்லாவிட்டால் கூட அடுத்தவர்களுக்காகவாவது பண்பாடுகளையும், பழக்கவழக்கங்களையும் நாம் சீர் செய்து கொள்ள வேண்டியுள்ளது. எனவே, பெண்ணே!.. பெண்ணே!… ஒழுங்கீனம் வேண்டாம் கண்ணே!…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.