நடு நிலை சமுதாயம்|Article | Unmai Udayam | Ismail Salafi | Muslims.

இஸ்லாம் நடுநிலையான மார்க்கமாகும். அதன் போதனைகள் தீவிரவாதத்தை எதிர்க்கின்றன. தீவிரவாதம் எந்தக் கோணத்தில் வந்தாலும் ஆபத்தையே ஏற்படுத்தும் என்பது இஸ்லாத்தின் உறுதியான நிலைப்பாடாகும். இதனால்தான், தீவிரவாதிகள் அழிந்து போவார்கள் என நபி(ச) அவர்கள் எச்சரிக்கையும் செய்துள்ளார்கள்.
“(மற்ற) மனிதர்களுக்கு நீங்கள் சாட்சியாளர்களாக இருப்பதற்காகவும், இந்தத் தூதர் உங்களுக்குச் சாட்சியாளராக இருப்பதற்காகவும் இவ்வாறே உங்களை நடுநிலையான சமுதாயமாக ஆக்கினோம். புறமுதுகிட்டுச் செல்பவர்களிலிருந்து இத்தூதரைப் பின்பற்றுபவர் யார்? என்பதை நாம் அறிவதற்காகவே, முன்னர் நீங்கள் முன்னோக்கிக் கொண்டிருந்த கிப்லாவை மாற்றினோம். அல்லாஹ் நேர்வழி காட்டியோரைத் தவிர மற்றவர்களுக்கு இது பாரமாகவே இருக்கும். அல்லாஹ் உங்களது நம்பிக்கையை பாழாக்குபவனாக இல்லை. நிச்சயமாக அல்லாஹ் மனிதர்களுடன் பெரும் கருணையாளனும், நிகரற்ற அன்புடையவனுமாவான்.” (2:143)
முஸ்லிம் உம்மத் நடுநிலையாக இருக்க வேண்டும். ஏனைய சமூகத்திற்கு சத்தியத்தின் சாட்சியாகவும் இருக்க வேண்டும். நடுநிலை தவறும் நிலை எதில் ஏற்பட்டாலும் அது ஆபத்தில்தான் முடியும். மார்க்க விவகாரங்களில் போதிய அறிவும் ஆழமும் இல்லாமல் வெறும் உணர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுப்பவர்கள் மார்க்கத்திற்கு சேவை செய்கின்றோம் என்ற பெயரில் மார்க்கத்திற்கும், தான் சார்ந்த சமூகத்திற்கும் அழிவையும் இழப்பையுமே ஏற்படுத்துவர்.
இலங்கை இஸ்லாமிய பிரச்சார அமைப்புக்களுக்கு மத்தியில் சில கருத்துக்களில் தீவிர சிந்தனைப் போக்கு ஏற்பட்ட போது இயக்க மோதல்கள், இயக்கப் பழிவாங்கல்கள் நடந்து வந்தன. தொப்பி போடுவது மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்ட அதேவேளை, ஆர்வமூட்டப்படாத ஒரு அம்சமாகும். சிலர் தொப்பி விடயத்தில் தீவிர நிலைக்குச் சென்று அதைக் கடமைபோல் பார்க்க முற்பட்டனர். அதனால் தொப்பி போடாமல் தொழுபவர்களுக்கு எதிராக செயற்பட்டனர். இதேபோன்றுதான் ஜுப்பாவும். சிலர் ஜுப்பாவை சுன்னத்தாக்கி ஜுப்பா அணியாதவர்களுக்கு பள்ளியில் பயான் செய்ய அனுமதிக்காத நிலை ஜுப்பாவில் ஏற்பட்ட தீவிரவாதமாகும்.

இதே போன்று சுன்னத்துக்கள் சிலவற்றை சிலர் கடமை போல் பார்க்க முற்பட்டனர். விரல் அசைத்தல், நெஞ்சில் தக்பீர் கட்டுதல் போன்ற விடயங்களை எதிர்ப்பதில் சிலர் தீவிரப் போக்கையும், இன்னும் சிலர் ஆதரிப்பதில் தீவிரப் போக்கையும் கைக்கொண்டதனாலும் பல மோதல்கள் ஏற்பட்டு வந்தன.
பித்அத்தான கூட்டு துஆவை சுன்னத்தாகவும் கட்டாயமாகவும் சிலர் பார்த்து வந்ததால் பல பள்ளிகளில் பிரச்சினை எழுந்தது. இந்தப் பிரச்சினைகளால் முஸ்லிம்களுக்கு மத்தியில் அடிதடிகள், வம்பு-வழக்குகள், வாள்வெட்டுக்கள், துப்பாக்கிப் பிரயோகங்கள் போன்றன நடந்தன. சில வேளை, பள்ளிகளுக்கு வெடிகுண்டுகளும் வீசப்பட்டன. இதன் உச்சகட்ட அரக்கத்தனமாக மஹகொட மஸ்ஜிதுர் ரஹ்மான் பள்ளிவாசல் தாக்கப்பட்டு படுகொலைகளும் இடம்பெற்றன.
இதன் பின் அடுத்த சமூகத்தின் பார்வையும் எம்பக்கம் திரும்பியது. முஸ்லிம்களில் சிலர், தமக்கு எதிரான நிலைப்பாட்டில் இருக்கும் முஸ்லிம்களை எதிர்ப்பதில் தீவிரப் போக்கிற்குச் சென்று மாற்றுமதத் தலைவர்களையும் இனவாதிகளையும் தூண்டிவிட்டு முஸ்லிம்களில் சிலரைத் தீவிரவாதிகளாகக் காட்டினர்.
இந்த நாட்டில் கருத்துத் தீவிரவாதம் இருந்தது. ஆனால், இந்த உலகம் காணும் தீவிரவாதம் இலங்கை முஸ்லிம்களிடம் இருக்கவில்லை. இந்த நிகழ்வுகளுக்குப் பின்னால் கருத்துத் தீவிரவாதத்துடன் சேர்ந்து அடுத்த சமூகத்திற்குக் காட்டிக் கொடுத்து பழிவாங்கும் தீவிரப் போக்கும் உருவாகி வருகின்றது.
பெண்கள் முகம் மூடுவதும் மூடாமல் இருப்பதும் அனுமதிக்கப்பட்ட, கடந்த கால அறிஞர்களுக்கு மத்தியிலும் கருத்து வேறுபாட்டிற்குரிய அம்சமாக உள்ளது. இந்நிலையில் முகம் மூடுவது மற்றும் அபாயா அணிவதற்கு எதிராக இனவாதிகள் செயற்பட்டு வரும் சூழலில் மூடுவது கட்டாயம்| திறப்பது ஹராம் என்ற தீவிர நிலைப்பாட்டிற்கு சிலரும், மூடுவது கூடாது என்ற தீவிரவாதத்திற்கு சிலரும் உள்ளாகியுள்ளனர். இதன் உச்சகட்டமாக பிற மதத் தலைவர்களிடம் இஸ்லாம் முகத்தை மூடச் சொல்லவில்லை என்று தேடிச் சென்று காட்டிக் கொடுக்கும் செயற்பாடும் நடந்துள்ளது. அவர்கள், இஸ்லாம் முகத்தை மூடச் சொல்லவில்லை| எனவே, முஸ்லிம் பெண்கள் முகத்தை மூடக் கூடாது என்று பேசவில்லை. அவர்கள் இஸ்லாத்தின் மீதும் முஸ்லிம்கள் மீதும் கொண்ட காழ்ப்புணர்வினால் செயற்படும் போது இந்த செயற்பாடு ஒரு காட்டிக் கொடுப்பாகவே பார்க்கப்பட வேண்டியுள்ளது.

இதே போன்று கல்வி சம்பந்தமாகவும் மருத்துவம் சம்பந்தமாகவும் சிலர் தீவிர மத நிலைப்பாட்டை எடுத்து மருத்துவத்திற்கும் கல்வித் திட்டத்திற்கும் எதிராக பிரச்சாரம் செய்வது இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் பிற்போக்குவாதமாகப் பார்க்கத் தூண்டும் அதே வேளை, இலங்கையில் தாலிபானிஸம் வளர்வதாக அடுத்தவர்களைப் பார்க்கச் செய்துள்ளது.
கடந்த காலங்களில் முஸ்லிம்களுக்கு எதிராக நடந்த நூற்றுக்கணக்கான தாக்குதல்கள், மனித உரிமை மீறல்கள், மற்றும் இப்போது நடந்து வரும் இனவாத செயற்பாடுகள் முஸ்லிம்களில் ஒரு சிலரை இன்னுமொரு தீவிர சிந்தனைப் போக்கிற்குத் திசை திருப்பும் நிலை உருவாகி வருகின்றது. இந்த நிலை 1990 களில் ஜிஹாத் பாட்டி, பைஅத் பாட்டி என்ற பெயரில் உருவாகி அருகிவிட்டது. ஆரம்பத்தில் காபிருக்குக் கட்டுப்படக் கூடாது, அரசாங்கத்திற்குக் கட்டுப்படக் கூடாது என்ற பிரசாரத்துடன் ஏத்தாளையில் ஒரு அமைப்பு உருவானது. ஆரம்பத்தில் அவர்கள் ‘ஹிஸ்புல்லாஹ்’ என்று அழைக்கப்பட்டனர். அவர்கள் ஜிஹாத் பாட்டி, பைஅத் பாட்டி என்றும் ஜமாஅதுல் முஸ்லிமீன் என்றும் அழைக்கப்பட்டனர்.
இவர்கள் காபிர்களின் சொத்துக்களை அபகரிக்கலாம், அது கனீமத் என்று கூறி அப்பாவி இளைஞர்கள் சிலரை சிறைக்கு அனுப்பினர். பாடசாலை செல்லக் கூடாது என்று கூறி பலரின் கல்வியில் மண்ணை அள்ளிப் போட்டனர். ஜிஹாத் என்று கூறி நான்காம் மாடி வரை சென்று வந்தனர். பின்னர் இந்தக் கருத்துக்களிலிருந்து மீண்டு பைஅத் மற்றும் குப்ர் பத்வாவுடன் அவர்களுக்குள்ளேயே பிரிந்து செயற்பட்டு வருகின்றனர். இந்தப் பின்னணியில் இப்போது சிலர் மீண்டும் தீவிரவாதக் கருத்துக்கள் பக்கம் சரிவதாகத் தெரிகின்றது. பலமான உளவு அமைப்பைக் கொண்ட இலங்கை அரசு ஏதோ ஒரு நோக்கத்தில் அவர்களைக் கைது செய்யாமல் விட்டு வைத்துள்ளது போன்றும் நிலைமை உள்ளது.
இஸ்லாத்தைத் தப்பாகப் புரிந்து கொண்ட ஒரு சிலர் இளைஞர்களுக்கு மத்தியில் விஷக் கருத்துக்களை விதைத்து வருகின்றனர். அனைத்து இஸ்லாமிய அமைப்புக்களும் இது குறித்து கவனம் செலுத்துவதுடன் சரியான வழிகாட்டல்களையும் இவர்களுக்கு வழங்க வேண்டியது காலத்தின் கட்டாயமாகும். இல்லையென்றால் எமது எதிரிகள் எம்மையும் எமது கல்வி, பொருளாதாரம், சமய உரிமைகள் என அனைத்தையும் அழிப்பதற்கான வாசல் கதவை இந்த ஓரிரு நபர்கள் திறந்து விட்டு விடுவார்கள்.
தீவிரவாதத்தின் பக்கம் சென்ற தமிழ் இளைஞர்களால் அந்த சமூகம் இழந்த அனைத்தும் இலங்கை அரச படைகளால் அழிக்கப்பட்டவர்களை விட ஆயுதம் தாங்கிய தமிழ் குழுக்களால் அழிக்கப்பட்ட தமிழர்களே அதிகமானவர்கள். தீவிரவாதிகள் அழிந்து போவார்கள் என்ற மாநபியின் பொன்மொழி என்றும் பொய்த்திடாது…
எனவே, இலங்கை முஸ்லிம்கள் முன்னால் உள்ள மிகப் பெரும் சவாலான தீவிரவாதம் முளைப்பதற்கு முன்னர் அதற்கான தீர்வை மிக அவசரமாகவும் தெளிவாகவும் தேடிக் கொள்வது எமது முக்கிய பொறுப்பாகவும் காலத்தின் கட்டாயமாகவும் மாறியுள்ளதை உலமாக்கள், இஸ்லாமிய அமைப்புக்கள் உன்னிப்பாகக் கவனிக்க வேண்டிய காலத்தின் கட்டாயத்தில் உள்ளோம்.

Leave a Reply

Your e-mail address will not be published. Required fields are marked *