இளமையும் இஸ்லாமும் | Article.

இளமையும் இஸ்லாமும்

ஆகஸ்ட் 12 ஆம் திகதி சர்வதேச இளைஞர் தினமாகும். இளமையை வீணாக விரயமாக்கிக் கொண்டிருக்கும் இளைய சமூகத்தை விழிப்படையச் செய்து அவர்களை வினைத்திறன் மிக்கவர்களாக மாற்ற வேண்டும் என்பதற்காகவே இத்தகைய தினங்கள் கொண்டாடப்படுகின்றன.

இளமையும் இஸ்லாமும்:
மனிதனின் வாழ்க்கைக் காலத்தையும் அவனது இளமைக் காலத்தையும் அல் குர்ஆன் இப்படிச் சித்தரித்துக் காட்டுகின்றது.

‘அவன்தான் மண்ணிலிருந்தும் பின்னர்; இந்திரியத் துளியிலிருந்தும் பின்னர் (கருவறைச் சுவரில்) ஒட்டிக் கொள்ளக் கூடியதிலிருந்தும் உங்களைப் படைத்தான். பின்னர் உங்களை சிசுவாக வெளியேற்றுகின்றான். பின்னர் உங்கள் இளமையை நீங்கள் அடைவதற்காகவும், பின்னர் உங்கள் வயோதிபத்தை நீங்கள் அடைவதற்காகவும் (உங்களுக்கு ஆயுளை ஏற்படுத்தினான்.) இதற்கு முன்னரே மரணிப்போரும் உங்களில் உள்ளனர். குறிப்பிட்ட தவணையை நீங்கள் அடைவதற்காகவும், நீங்கள் விளங்கிக் கொள்வதற்காகவும் (இவ்வாறு செய்தான்.)’ (40:67)

இந்த வசனம் சிறு பிள்ளைப் பருவம் கடுமையான இளமைப் பருவம், முதுமைப் பருவம் என மனித வாழ்க்கைப் படித்தரத்தைப் பிரிக்கின்றன.

.اَللّٰهُ الَّذِىْ خَلَقَكُمْ مِّنْ ضُعْفٍ ثُمَّ جَعَلَ مِنْۢ بَعْدِ ضُعْفٍ قُوَّةً ثُمَّ جَعَلَ مِنْۢ بَعْدِ قُوَّةٍ ضُعْفًا وَّشَيْبَةً يَخْلُقُ مَا يَشَآءُ ‌ۚ وَهُوَ الْعَلِيْمُ الْقَدِيْرُ ‘

அல்லாஹ்தான் உங்களைப் பலவீனத்திலிருந்து படைத்தான். பின்பு, அவனே பலவீனத்தின் பின்னர் பலத்தை ஏற்படுத்தினான். பின்பு, பலத்தின் பின்னர் பலவீனத்தையும் (முதுமையின்) நரையையும் அவன் ஏற்படுத்தினான். அவன் நாடுவதைப் படைப்பான். அவன் யாவற்றையும் அறிந்தவன்| பேராற்றலுடையவன்.’ (30:54)

இந்த வசனத்தில் குழந்தைப் பருவம், முதுமைப் பருவம் என்பவற்றை பலவீனமான பருவமாகக் கூறும் அல்லாஹ் இளமைப் பருவத்தை பலமான பருவம் என்று குறிப்பிடுகின்றான். பலம்மிக்க இளமைப் பருவத்தையுடையவர்கள்தான் சமூகத்தில் உள்ள சிறுவர்கள், முதியவர்கள் எனும் பலவீனமான பருவத்தினரைப் பாதுகாப்பவர்களாகவும் பராமரிப்பவர்களாகவும் இருக்க வேண்டும்.

ஒரு நாட்டில் அநியாயம், அக்கிரமம் நடந்து அந்த நாட்டில் உள்ள சிறுவர்கள் பலவீனமான ஆண்கள், பெண்கள் எல்லோரும் ‘இந்த அநியாயக்கார ஊரில் இருந்து எங்களை வெளியேற்றிவிடு’ என அல்லாஹ்விடம் பிரார்த்திக்கும் நிலையிருந்தால் நீங்கள் எப்படி அல்லாஹ்வின் பாதையில் போராடாமல் இருக்க முடியும் என குர்ஆன் கேட்கின்றது.

‘அல்லாஹ்வின் பாதையிலும், ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் ஆகியோரில் பலவீனமாக்கப்பட்டவர்களுக்காகவும் நீங்கள் போர் புரியாமல் இருக்க உங்களுக்கு என்ன நேர்ந்தது? அவர்களோ ‘எங்கள் இரட்சகனே! அநியாயக்காரர்கள் வாழும் இவ்வூரை விட்டும் எங்களை வெளியேற்று வாயாக! உன்னிடமிருந்து எமக்கொரு பொறுப்பாள ரையும் ஏற்படுத்துவாயாக! இன்னும் உன்னிடமிருந்து எமக்கொரு உதவியாளரையும் ஏற்படுத்துவாயாக!’ என்று (பிரார்த்தித்துக்) கூறுகின்றனர்.’ (4:75)

இந்த வசனம் இளமையும், துடிப்பும் உள்ள இள ரத்தங்கள் சமூகத்தின் காவலர்களாகவும், சமூகக் கொடுமைகளுக்கு எதிராகப் போராடக் கூடியவர் களாகவும் இருக்க வேண்டும் என்று கூறுகின்றது.

இளமையும் இன்றைய உலகும்:
தீய சக்திகள் அனைத்தும் இளைஞர்களைக் குறிவைத்துள்ளன. போதைக் கடத்தல் மாபியாக்கள், ஆபாச வியாபாரிகள் அரசியல் கட்சிகள் தலைமைகள், சர்வதேச கம்பனிகள் அனைத்தும் இளைஞர்களைக் குறிவைத்தே காய் நகர்த்துகின்றன. இளைஞர்களை சுய சிந்தனையுடையவர்களாக வாழ விடாமல் தடுப்பதற்காக அவர்களை போதைக்கும், ஆபாசத்திற்கும், கேளிக்கைகளுக்கும் அடிமையாக்குவது, அவர்களது வாழ்வை இலட்சியமற்றதாக மாற்றுவது என்ற அடிப்படையில் செயற்பட்டு வருகின்றன. இதே வேளை, இளமை பற்றி தப்பான பல கண்ணோட்டங்களும் மக்கள் மனதில் இடம் பிடித்துள்ளன.

அனுபவி ராஜா அனுபவி!:
இளமை என்பது தப்புத் தவறுகளைச் செய்யும் பருவம் என்று சமூகம் அங்கீகரித்துள்ளது. ஏதாவது தவறுகள் செய்தாலும் தெரியாத பொடியன்மார்தானே! இந்த வயசுல செய்யாம வேறு எந்த வயசுல செய்யுறது! இதெல்லாம் வயசுக் கோளாறு என்று தவறுகளுக்கு பக்க பலமாக ஒத்து ஊதும் மனநிலைதான் மக்கள் மன்றத்தில் உள்ளது.

ஆனால், இஸ்லாம் இளமையை அனுபவிக்கும் பருவமாகக் கூறவில்லை. பொறுப்புக்களின் ஆரம்பப் பருவமாக இஸ்லாம் இளமையைப் பார்க்கின்றது.

உறங்குபவர் விழிக்கும் வரை.
‘சிறுவர் பருவ வயதை அடையும் வரை, பைத்தியக் காரர் புத்தி தெளியும் வரை (செய்யும் தவறுகளைப்)பதிவதை விட்டும் பேனை உயர்த்தப்பட்டு விட்டது’ என நபி(ச) அவர்கள் நவின்றார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா(Ë)
நூல்: அஹ்மத் 24694, அபூதாவூத் 4401, நஸாஈ 7303, இப்னு குஸைமா 1003

இந்த ஹதீஸில் சிறு பிள்ளைப் பருவம் பொறுப்பற்றது என்றும் இளமைப் பருவத்தில் இருந்து செய்யபட்படும் தவறுகள் பதியப்படும் என்றும் கூறுகின்றது. எனவே, பருவ வயதை அடைந்தவர்கள் பக்குவமாக இருக்க வேண்டும். தப்புத் தவறுகளைச் செய்வதற்குரிய பருவம் அல்ல இளமைப்பருவம் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

இளமையைப் பயன்படுத்துங்கள்:
இளமை என்பது ஆற்றல்மிக்கது, கடுமையானது என்பதைப் பார்த்தோம். இந்த ஆற்றல் பயன்படுத்தப்பட வேண்டும். மாறாக பாழ்படுத்தப்பட்டு விடக் கூடாது. இளைஞர்களின் இளமை, சக்தி, ஆற்றல் என்பன அவர்களது எதிர்கால மற்றும் மறுமை நலனுக்காகவும் அவர்களது குடும்பம், ஊர், சமூகம், மனித இனம் என்பவற்றின் நலனுக்காகவும் பயன்படுத்தப்பட வேண்டும்.

‘உனது முதுமை வருவதற்கு முன் உனது இளமையைப் பயன்படுத்திக் கொள்!’ என நபி(ச) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அனஸ்(வ), அம்ர் இப்னு மைமூன்(வ)
நூல்: நஸாஈ 11832, ஹாகிம் 7846

ஒருவன் கல்வியைத் தேடுவது உடல் ஆரோக்கியத்தை வலுப்படுத்துவது, உழைப்பது, குடும்பத்தைக் காப்பது, ஊருக்கும் சமூகத்திற்கும் நல்லது செய்வது, தனிப்பட்ட வணக்க வழிபாடுகளில் ஆர்வம் காட்டுவது, இவை அனைத்துக்கும் ஏற்ற பருவம் இளமைப் பருவம்.

இன்றைய இளைஞர்களின் சக்திகளெல்லாம் வீணாக விரையமாகின்றன. எத்தனையோ தந்தையர்கள் 10-20 வருடங்களாக வெளிநாடுகளில் அடிமை வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். அவர்களது இளமை, ஆரோக்கியம், உடல் சுகம், உள அமைதி அத்தனையையும் பாலை வன மண்ணில் போட்டுப் புதைத்துவிட்டு தனது மனைவி மக்களின் நலனுக்காக மாடாய் உழைக்கின்றனர்.

தாய்-தந்தையின் கஷ்டத்தை உணராத இளைஞர்கள் வீட்டிற்கும் நாட்டிற்கும் தொல்லையாக தமது வாழ்வைத் தொலைத்துக் கொண்டிருக்கின்றனர். தந்தையின் உழைப்பைத் தவறான வழியில் ஊதாரித்தனமாக செலவு செய்து கொண்டிருக்கின்றனர்.

திருமணம் முடித்த பின் வீடு கட்ட வெளிநாடு சென்றவன் அதன் பின் பிள்ளைகளின் படிப்புக்காக, பின் பிள்ளைகளின் திருமணத்திற்காக என வாழ்வைக் கழிக்கின்றான். அவனது மகன் 15-18 வயதில் தந்தை அனுப்பும் பணத்தில் தனது காதலிக்கும் சேர்த்து செலவு செய்து கொண்டிருக்கின்றான். 18 வயதில் தனது பாலியல் தேவைகள் அவனுக்குப் புரிகின்றது. திருமணம் முடித்ததில் இருந்து தனது தாயும், தந்தையும் தமது இளமைத் தேவைகளையும் உடல் தேவைகளையும் உள்ளத்தில் வைத்துப் பூட்டி விட்டு தமது பிள்ளைகளுக்காகச் செய்யும் தியாகம் இந்த இளம் சந்ததிகளுக்குப் புரிவதில்லை.

எனவே, ஒரு இளைஞன் கல்வி கற்கின்றான் என்றால் தாய்-தந்தையின் பொறுப்பில் இருக்கலாம். இல்லையென்றால் தந்தையுடன் சேர்ந்து குடும்பச் சுமையைச் சுமக்க வேண்டும். சுய உழைப்பில் ஈடுபட வேண்டும். எல்லோரும் கற்று அலுவலக வேலையில் இருக்க முடியாது. இன்று ஏராளமான தொழில்நுட்பத் துறைகள் உள்ளன. ஏதேனும் ஒது துறையைத் தெரிவு செய்து அதைக் கற்று சுயமாக உழைத்து வாழ கற்றுக் கொள்ள வேண்டும். அநாதையாக இருந்த நபி(ச) அவர்கள் தனது பொறுப்பாளருக்கு சுமையாக இருக்காமல் சிறுபிள்ளைப் பருவத்திலேயே கூலிக்கு ஆடு மேய்த்துள்ளார்கள் என்பதைக் கவனத்திற் கொள்ள வேண்டும்.

இளமையும் இறை வழிபாடும்:
முதுமையில் செய்யும் இறை வழிபாட்டை விட இளமையில் செய்யும் இறை வழிபாடு ஏற்றம் மிக்கதாகும். இந்த வகையில் இளமைப் பருவத்தை இறைவனுக்கு மாறு செய்யும் விதத்தில் கழிக்காமல் இறைவனுக்கு ஏற்ற விதத்தில் கழிக்க வேண்டும்.

அல்லாஹ்வின் நிழலைத் தவிர வேறு நிழலே இல்லாத அந்நாளில் அல்லாஹ் 07 கூட்டத்தினருக்கு தனது நிழலில் இடம் கொடுப்பான் எனக் கூறிய நபியவர்கள் அதில் ஒரு கூட்டமாக தனது இளமைக் காலத்தை இபாதத்தில் கழித்த இளைஞர்களையும் குறிப்பிட்டார்கள்.
அறிவிப்பவர்: அபூஹ§ரைரா(வ)
நூல்: புகாரி

எனவே, இளமை என்பது இறைவனுக்கு மாறு செய்வதற்கல்ல. மாறாக, இறைவனை வழிபடுவதற்கான பருவம் என்பதைப் புரிய வேண்டும்.

இளமையும் ஈமானியப் போராட்டமும்:
இளமை என்பது இறை நிராகரிப்புக்குத் துணை போவதன்று. தீமைகளுக்கு எதிரான போராட்டத்திற்கு இளமை பயன்படுத்தப்பட வேண்டும். தீய சக்திகளுக்கு எமது இளமையை பலிக்கடாவாக்கி விடக் கூடாது.

சிலை வணக்கத்திற்கு எதிரான இப்றாஹீம் நபியின் ஈமானிப் போராட்டம் இளமைக் காலத்திலேயே நடந்ததாகக் குர்ஆன் குறிப்பிடுகின்றது.

‘இப்றாஹீம் எனக் கூறப்படும் ஓர் இளைஞன் இவை குறித்துக் குறை கூறக் கேட்டிருக்கின்றோம்’ என அவர்களில் (மற்றும்) சிலர் கூறினர்.’ (21:60)

இறை நிராகரிப்புக்கு எதிராக அநியாயக்கார மன்னனுக்கு முன்னால் சத்தியத்தைச் சொல்லி அதனால் ஏற்பட்ட சோதனைகளைத் தாங்கி தமது உலக இன்பங்களையெல்லாம் தூக்கி எறிந்துவிட்டு குகையில் தங்கி 200 ஆண்டுகள் தூங்கிய குகைவாசிகளும் இளைஞர்கள் எனக் குர்ஆன் குறிப்பிடுகின்றது.

‘அவர்களது செய்தியை உண்மையாக உமக்கு நாம் கூறுகிறோம். நிச்சயமாக அவர்கள் தமது இரட்சகனை நம்பிக்கை கொண்ட சில இளைஞர்களாவர். மேலும், அவர்களுக்கு நேர்வழியை நாம் அதிகப் படுத்தினோம்.’ (18:13)

இவ்வாறே நபி(ச) அவர்களின் தூதுத்துவப் பணியில் அவருடன் தோளோடு தோள் நின்று உழைத்தவர்களில் அதிகமானவர்கள் இளைஞர்களாவர். இஸ்லாத்தை வளர்த்தல், இஸ்லாத்தைக் காத்தல் என்ற இந்த ஈமானியப் போராட்டத்தில் தமது உலக இன்பங்களை மட்டுமன்றி உடல் உறுப்புக்கள், உதிரங்கள், உயிர்களை அர்ப்பணித்து வரலாற்றில் மங்காப் புகழ் பெற்றவர்கள் இளம் சமூகத்தினரே!

எனவே, இந்த இளமைப் பருவம் தீமைகளுக்கு எதிராக நன்மைகளை வளர்க்க முயற்சிக்கும் அனைத்து வகையான ஈமானியப் போராட்டங்களுக்கும் உரமாக அமைய வேண்டும்.

சமூகப் பணி!:
இன்றைய சமூகம் பல்வேறுபட்ட தேவைகளை உடையது. முஸ்லிம் சமூகம் மட்டுமன்றி மனித இனம் பல்வேறுபட்ட பிரச்சினைகளை எதிர் கொண்டுள்ளது. கல்வி, பொருளாதாரம் என்பவற்றில் சமூகம் பின்னடைந்துள்ளது. சமூகம் சந்திக்கும் சவால்களை சமாளித்து சமூகத்தைத் தூக்கி விடும் பொறுப்பு இளம் சமூகத்திற்குள்ளது.

கற்ற இளைஞர்கள் ஒன்று சேர்ந்து ஒவ்வொரு ஊரிலும் கஷ்டப்படும் குடும்பங்களின் கல்விக்கு உதவலாம். வீணாக வீதியில் கழியும் நேரத்தை இளைஞர்கள் ஒன்று சேர்ந்து அதே வீதியில், மையவாடியில், பாடசாலையில், பள்ளிவாசலில்…. போன்ற இடங்களில் சிரமதான முயற்சிகளை மேற்கொள்ளலாம்.

ஊரில் உள்ள ஏதேனும் ஒரு குடும்பத்தின் பிரச்சினையை கையில் எடுத்து பெரியவர்கள், பள்ளி நிர்வாகங்களின் ஆலோசனைகளையும் மற்றும் வழிகாட்டல்களையும் பெற்று அதைத் தீர்ப்பதற்காக கூட்டு முயற்சிகளில் ஈடுபடலாம். இவ்வாறு இளமையை சமூக சிந்தனை கொண்டதாக மாற்ற முடியும்.

எனவே, இளைஞர்கள் முதலில் தமது ஆளுமைகளை இனங்கண்டு அவற்றை வளர்த்துக் கொள்ள வேண்டும். தமது உடலின் ஆரோக்கியத்தையும் ஆன்மீகத்தையும் அழிக்கக் கூடிய தீய நடத்தைகள், பழக்கவழக்கங்களுக்குப் பலியாகிவிடாமல் தம்மைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். தன்னால் தனக்கோ தனது குடும்பத்திற்கோ தான் சார்ந்த சமூகத்திற்கோ எந்தப் பாதிப்பும் வந்து விடக் கூடாது என்ற இலட்சியத்தை இதயத்தில் பதிந்து கொள்ள வேண்டும். சமூகத்திற்கும் சமயத்திற்கும் தன்னாலான தொண்டுகளை ஆற்ற இளம் சமூகம் தன்னைத் தயார் படுத்திக் கொள்ள வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.