இலங்கை அரசியல் குழப்பமும் உணர வேண்டிய உண்மைகளும்.

ஆசிரியர் பக்கம் – டிசம்பர் 2018

(உண்மை உதயம்)

இலங்கை அரசியல் குழப்பமும் உணர வேண்டிய உண்மைகளும்

இலங்கையில் அண்மையில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பம் தேசிய மற்றும் சர்வதேச மட்டத்தில் கவன ஈர்ப்பைப் பெற்றுள்ளது. இக்கட்டுரை வெளிவரும் போது இந்தப் பிரச்சினை ஒரு தீர்வுக்கு வந்திருக்கலாம் அல்லது இன்னொரு கட்டத்திற்கு மாறியிருக்கலாம். ஆனால், சில உண்மைகளை இவ்வாக்கத்தின் மூலம் உணர்த்த நாடுகின்றோம்.

பிரதமர் நீக்கமும் நியமனமும்:
ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன அவர்கள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்களை நீக்கிவிட்டு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அவர்களைப் பிரதமராக நியமிக்கின்றார். ஒட்டுமொத்த அரசியல் கொந்தளிப்பின் ஆரம்பமாக இது அமைகின்றது.

பிரதமரை நியமிக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு உண்டு. இந்த அடிப்படையில் ஒரு பிரதமரை நியமித்தமை அவரது அரசியல் அதிகாரத்திற்கு உட்பட்டதே! ஆனால், மகிந்த அவர்களை அவர் பிரதமராக நியமித்ததன் மூலம் மிகப்பெரும் ஜனநாயகத் துரோகத்தைச் செய்துவிட்டதாக மக்கள் கருதுகின்றனர்.

சென்ற ஜனாதிபதித் தேர்தலில் மக்கள் மைத்திரியை வெல்ல வைத்ததற்கு அவர் மீதுள்ள பற்றோ, பாசமோ, பரிவோ, நாட்டை ஆளும் ஆளுமைமிக்கவராக அவரைக் கருதியதோ காரணம் அல்ல. மாறாக, மகிந்த ஆட்சி காலத்தில் நடந்த இனவாதத் தாக்குதல்கள், சிறுபான்மைக்கு எதிரான மற்றும் ஊடகவியலாளர்களுக்கு எதிரான செயற்பாடுகள், ஊழல் மோசடி போன்ற நிகழ்வுகளால் மகிந்த அரசின் மீது கொண்ட வெறுப்பின் காரணமாகவே மைத்திரியை ஜனாதிபதியாக்கினர்.

மைத்திரி ஜனாதிபதியானதில் ஐக்கிய தேசியக் கட்சியின் வாக்குகளுக்கு பெரும் பங்குண்டு என்பதை யாராலும் மறுக்க முடியாது. தான் ஜனாதிபதியானதற்கு மிக முக்கியமான காரணமாகத் திகழ்ந்த ரணிலை நீக்கியதைக் கூட மக்கள் பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை. இவரை ஜனாதிபதியாக விடக் கூடாது என இயங்கிய மகிந்தவை பிரதமராக்கியதே மக்களிடம் வெறுப்பை ஏற்படுத்தியது எனலாம். மக்கள் அவருக்கு அளித்த ஆணைக்கு அவர் செய்த மிகப் பெரிய ஜனநாயகத் துரோகமாக இது பார்க்கப்படுகின்றது. இந்தப் பிரச்சினையின் போது சிறுபான்மைச் சமூகத் தலைமைகள் ரணிலைப் பாதுகாத்துள்ளன. பணத்துக்கோ, பதவிக்கோ பலிபோகாமல் சிறுபான்மை சமூகம் ரணிலைப் பாதுகாத்ததற்குக் காரணம் ரணில் மகிந்தவை விட நல்லவர், வல்லவர் என்பதற்காக அல்ல. ஜனநாயகம் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதற்காகவே இப்போராட்டத்தில் ரணில் பக்கம் அவர்கள் இருந்தனர்.

ரணில் இரு முறை பிரதமரானதிலும் முஸ்லிம்களின் கணிசமான பங்களிப்பு உண்டு. இதை ரணில் நன்றியுடன் நினைவில் நிறுத்த கடமைப்பட்டுள்ளார். சந்திரிக்கா அம்மையார் காலத்தில் ரவூப் ஹகீம் அமைச்சுப் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்ட போது முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற அங்கத்தவர்கள் அனைவரும் ஒன்றுபட்ட முடிவை எடுத்த போது பாராளுமன்றத்தைக் கலைக்க வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு அவர் ஆளானார். அதன் பின்னர் நடந்த தேர்தலில்தான் ரணில் பிரதமரானார். ஆனால், அதன் பின் முஸ்லிம்களுக்கு எதிராக புலிகள் சமாதான காலத்தில் செய்த அனைத்து அக்கிரமங்களையும் அவர் அமைதியாகவே பார்த்துக் கொண்டிருந்தார். இம்முறையும் அவர் பிரதமராவதற்கான முஸ்லிம்களின் பங்களிப்பு மிகையானது. இருப்பினும் பெரிய அளவான பாதுகாப்பினை அவர் முஸ்லிம் சமூகத்திற்கு வழங்கவில்லை. என்ற குற்றச்சாட்டு நிலவுகின்றது.

இதனால் கடந்த தேர்தலை விட இப்போது முஸ்லிம்களின் பலரும் மகிந்த ஆதரவாளர்களாக மாறியுள்ளனர். ரணில் பிரதமர் பதவியில் இருந்து தூக்கப்பட்ட பின்னர் முஸ்லிம் கட்சிகள் மகிந்தவிற்கு ஆதரவு அளித்தல் நல்லது என்ற அபிப்பிராயம் முஸ்லிம்களிடத்தில் ஓரளவு எழுந்தது. இருந்தாலும், இனவாத மதகுருக்கள் மற்றும் திகண கலவரத்தின் சூத்திரதாரிகளின் எதிர்பாராத திடீர் மீள்வருகைச் செயற்பாடுகளினால் அந்த எண்ணம் ஓரளவு மாற ஆரம்பித்தது. இனவாதத்தை வைத்து அரசியல் செய்வது போதிய பலனைத் தராது என்பதை இன்னும் இந்தத் தரப்பு உணராதிருப்பது ஆச்சரியமானதாகும்.

சிறுபான்மைச் செல்வாக்கு!:
இலங்கை அரசியலில் சிறுபான்மைக் கட்சிகளின் செல்வாக்கை இந்த அரசியல் குழப்பம் மீண்டும் தெளிவாக உணர்த்தியுள்ளது. சம்பந்தன் ஐயாவோ, ரவூப் ஹகீம் மற்றும் ரிசாட் பதியுதீன் இருவருமோ மஹிந்தவுடன் இணைந்திருந்தால் ரணிலின் ஆட்டம் அடங்கியிருக்கும். இந்த நேரம் சில முக்கிய புள்ளிகள் கூட சிக்கலில் சிக்கி சின்னாபின்னப்பட்டிருப்பர். ஆனால், சிறுபான்மை சமூகத் தலைமைகள் ஜனநாயகத்திற்காக ஒருமித்த நிலைப்பாட்டில் இருந்ததினாலேயே மகிந்தவினால் 113 அடைய முடியாமல் போனது. எனவே, இலங்கை அரசியலில் பெரிய கட்சிகள் சிறுபான்மைக் கட்சிகளின் தீர்மானிக்கும் சக்தியை உணர்ந்து இனவாதமோ, மதவாதமோ அற்ற அரசியலை நடாத்த முன்வர வேண்டும். இனவாத சந்தேகம் இல்லையென்றால் ரணிலை விட மகிந்த ஆளுமைமிக்க தலைவராகவே சிறுபான்மை மக்களால் பார்க்கப்பட்டிருப்பார்| பாராட்டப்பட்டிருப்பார்.

பாராட்டப்பட வேண்டிய முஸ்லிம் தலைவர்கள்:
இந்த அரசியல் குழறுபடியில் ரவூப் ஹகீம்-ரிசாட் ஆகிய இருவரையும் முஸ்லிம் சமூகமே நம்பவில்லை. உரிய விலை வந்த பின்னர் மாறிவிடுவர் என்றே எண்ணினர். ஆனால், அவர்கள் பணத்திற்கும் பதவிக்கும் பலியாகாது கொள்கைக்காக உறுதியாக இருந்ததும் இரு கட்சிகளும் இணைந்து முடிவெடுத்ததும் பாராட்டத்ததக்கதாகும். திகண வன்முறையின் பின்னர் இதே போன்று இரு கட்சிகளும் 100% நஷ்டஈடு வழங்கப்படாவிட்டால் கட்சி மாறுவோம் என ஒருமித்து அறிவுறுத்தியிருந்தால் நல்லாட்சி அரசாங்கம் ஆட்டம் கண்டிருக்கும். இந்தக் குழறுபடியில் நமக்குக் கிடைத்த ஆறுதலாக முஸ்லிம் தலைமைகளின் இந்த நிலைப்பாட்டையும், தலைமைகளுக்குக் கட்டுப்பட்ட உறுப்பினர்களின் நிலைப்பாட்டையும் கொள்ளலாம்.

மக்கள் ஆர்ப்பாட்டங்கள்:
இந்த அரசியல் குழறுபடியில் இருந்து மீள வேண்டும் என்றால் மகிந்த பாராளுமன்றத்தில் 113 ஆதரவைக் காட்ட வேண்டும். ஆனால், அதைக் காட்டுவதற்கு முன்னர் மக்கள் செல்வாக்கைக் காட்டும் ஆர்ப்பாட்டங்கள் இடம் பெற்றன. இந்த நாட்டில் அரசியலில் அதிக மக்களின் ஆதரவைப் பெற்ற தனி நபராக மகிந்த அவர்களே திகழ்கின்றார் என்பதே உண்மை!
இதே போன்று இரு கட்சிகளும் மக்கள் ஆதரவைக் காட்டும் முயற்சியில் ஈடுபட்டன. இது உண்மையில் அர்த்தமற்ற செயற்பாடு என்பதையும் அரசியல் கட்சிகள் தமது பிரச்சினைக்கு மக்களை அர்த்தமற்ற விதத்தில் பயன்படுத்தும் இயல்பு கொண்டவை என்பதையும் உணர்த்துகின்றது.

பாராளுமன்றக் கலைப்பு!:
இந்த நிலையில் தமது திட்டம், தோல்வியடைந்த நிலையில் ஜனாதிபதி இரவோடு இரவாக பாராளுமன்றத்தைக் கலைத்தார். இலங்கையில் நடைமுறையில் உள்ள நிறைவேற்று அதிகாரம் மிக்க ஜனாதிபதி முறையை ஒழிக்க வேண்டும் என்ற கோஷத்தில்தான் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுகின்றனர். ஆனால், பதவிக்கு வந்த பின்னர் அதை மறந்து விடுகின்றனர். இந்தக் கோஷத்தை அதிகமாக முன்வைத்த அரசுதான் நல்லாட்சி அரசாங்கம் (மைத்திரி-ரணில்). ஆனால், பதவிக்கு வந்த பின்னர் அவர்கள் இதற்கான முயற்சியை முன்னெடுக்கவில்லை. இதில் ஜனாதிபதி மற்றும் பிரதமர் இருவருக்குமே பங்குள்ளது. இதற்காகப் போராடிய சோபித தேரர் போன்றவர்கள் இறந்தும் விட்டார்கள்.

எல்லோரும் அந்த அதிகாரம் அடுத்தவர்களிடம் இருக்கும் போது வெறுக்கின்றார்கள்| தம்மிடம் வந்த பின்னர் நிறைவேற்று அதிகாரத்தை நேசிக்கின்றனர். இதுதான் அடிப்படைப் பிரச்சினையாகும். இதன் விளைவுதான் ரணிலுக்கு மட்டுமன்றி அனைத்துப் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் வைக்கப்பட்ட ஆப்பாக அமைந்தது.

இன்னொரு பாராளுமன்றத் தேர்தலைச் சந்திப்பதாக இருந்தால் நாடு எத்தனை கோடிகளைச் செலவிட வேண்டும்! எத்தனை குழப்பங்களையும், வன்முறைகளையும் சந்திக்க நேரிடும்! இதனால் பல பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது ஓய்வூதியத்தை இழப்பார்கள். பலர் தமது அங்கத்துவத்தையும் இழப்பார்கள். நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் பலதரப்பட்ட நெருக்கடிகளை உண்டாக்கும் ஒரு முடிவை அமைதியும், சாந்தமும் நிறைந்த ஒருவர் எப்படி எடுத்தார் என மக்கள் சந்தேகிக்கின்றனர்.

பாராளுமன்றக் கலைப்புக்கு எதிராக நீதிமன்ற உத்தரவைப் பெற்று பாராளுமன்றம் கூட்டப்படுகின்றது. இந்த நாட்டின் உயர் ஜனநாயகக் கட்டிடம் வன்முறைக் களமாக மாறுகின்றது.

கூச்சலோடும், கூக்குரலோடும் இடையூறு ஏற்படுத்துவதுடன் ஆரம்பமாகி ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்வது, ஆபாசமானதும் அசிங்கமானதுமான வார்த்தைப் பிரயோகங்களைப் பாவிப்பது, சபாநாயகரை அவமதித்து அசிங்கப்படுத்துவது, அவரைத் தாக்க முயல்வது, சபாநாயகரின் ஆசனத்தில் நீர் ஊற்றுவது, பாராளுமன்ற வளாக சொத்துக்களுக்கும் உபகரணங்களுக்கும் சேதம் ஏற்படுத்துவது, மிளகாய்த் தூள் வீசுவது, பாதுகாப்புப் பணியில் ஈடுபட்ட காவல் துறை மீது அத்துமீறி அவர்களையும் தாக்குவது, கையில் கிடைத்த பொருட்களை ஆயுதங்களாக மாற்றுவது, ஆடையைத் தூக்கிக் காட்டுவது…. என எண்ணிலடங்கா அசிங்கங்கள் அரங்கேற்றப்பட்டமையையும் அது தொடர்ந்து கொண்டிருந்தமையையும் எம்மால் நன்றாகவே அவதானிக்க முடிந்தது. இவ்வளவும் ஒளிப்பதிவு செய்யப்பட்டுக் கொண்டிருக்கின்றது, உள்நாடு மாத்திரமன்றி வெளிநாட்டு ஊடகங்கள் உட்பட முக்கிய பிரதானிகள் பார்த்துக் கொண்டிருக்கின்றார்கள் என்று தெரிந்து கொண்டே நடக்கின்றது.

பகிரங்கமாக இப்படி நடப்பவர்கள் தனிப்பட்ட வாழ்வில் எப்படி சட்டத்தை மதிப்பவர்களாகவும் கண்ணியம் காப்பவர்களாகவும் இருப்பார்கள்?

இதில் ஒரேயொரு விடயம் சந்தோசப்படுவதற்கு உள்ளது. இதுவரை அரசியல்வாதிகள் எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களைக் கண்டால் சிரித்து, கைகுலுக்கி, ஒன்றாக உண்டு உறவாடிக் கொள்வார்கள். ஆனால், இருவரின் தொண்டர்களும் முட்டி மோதிக் கொண்டு, காவல்நிலையம், நீதிமன்றம், சிறை.. என்று தன்னையும் தன் குடும்பத்தையும் சம்பந்தமே இல்லாமல் சீரழித்துக் கொள்வார்கள். ஆனால், அது தலைகீழாக மாறி சம்பந்தப்பட்ட அவர்களே மோதிக்; கொள்வதைப் பார்க்கும் போது நிச்சயம் ஒரு திருப்தி இருக்கின்றது. பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஒரு நிம்மதி இருக்கின்றது. இவர்களது இச்செயற்பாடுகள் தேசிய மட்டத்திலும், சர்வதேசமட்டத்திலும் இலங்கையின் நற்பெயருக்குக் களங்கத்தை ஏற்படுத்தியுள்ளன. இதைப் பற்றிக் கவலைப்பட அவர்களுக்கெல்லாம் எங்கே நேரம் இருக்கப் போகின்றது! தான் அடித்த கொள்ளை, செய்த கொலைகள், தில்லுமுல்லுகள்… எல்லாவற்றையும் மறைக்க தான் சார்ந்திருக்கும் அல்லது தனது கட்சி ஆட்சியைப் பெற வேண்டும். அப்போதுதான் தப்பிக்கலாம் என்ற எண்ணம் மாத்திரமே தலையில் உருண்டோடிக் கொண்டிருக்கின்றது போலும்!

தலைமை மாற்றம்:
இதே வேளை, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமை மாற்றம் குறித்த செய்திகளும் பரவலாகப் பேசப்பட்டு வருகின்றன. சஜித் பிரேமதாச தலைவராக அல்லது பிரதமர் பொறுப்புக்கு வரவேண்டும் என்ற எண்ணம் எழுந்துள்ளது. தலைமை மாற்றப்பட்டால் அந்தக் கட்சி அங்கத்துவர்கள் மத்தியில் ஒரு எழுச்சி ஏற்படலாம். ஆனால், முஸ்லிம்கள் ஆஹா ஓஹோ என பேசும் நிலையில் இது இல்லை.

இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிரான எத்தனையோ இனவாத அடக்குமுறைகள் கட்டவிழ்த்து விடப்பட்ட போதும் எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினராக இருந்தும் கூட சஜித் பிரேமதாச அவர்கள் இது குறித்து ஒரு வார்த்தையும் பேசியதில்லை. அப்போது ஆளும் கட்சியில் இருந்த சிலர் கூட அதை எதிர்த்துப் பேசும் போது மௌனமாக இருந்தவர் இவர். இவ்வளவுக்கும் முஸ்லிம்களில் பெரும்பான்மையானவர்கள் ஐக்கிய தேசிய கட்சியின் ஆதரவாளர்கள். இந்நிலையிலும் இவர் நீதிக்காக, நியாயத்திற்காக குரல் கொடுக்கவில்லை என்றால் இவரை நம்பி எப்படிப் பின்னால் செல்வது என்ற கேள்வியில் நியாயம் இல்லாமலும் இல்லை!

இந்தக் கட்டுரை வெளிவரும் போது இன்னும் பல மாற்றங்கள் வந்திருக்கலாம். ஒரு பல்கட்சி அரசியல் நடக்கும் நாட்டில் முஸ்லிம்கள் அனைவரும் ஒரு கட்சி சார்பாக இருப்பது நல்லதல்ல. எல்லா முட்டைகளையும் ஒரே கூடையில் போடக் கூடாது என்பார்கள். இது குறித்து நாம் சிந்திக்க வேண்டிய காலத்தின் கட்டாயத்தில் இருக்கின்றோம்.

இதே வேளை, இலங்கை முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகிய இரு முஸ்லிம் கட்சிகளும் இணைந்து ஒற்றுமையாகப் போட்டியிடும் வாய்ப்புக்கள் குறித்து ஆராய்ந்து முஸ்லிம்களை ஒன்றாக இணைத்து ஒரே கூரையின் கீழ் ஒற்றுமையாக வைத்து அதிக ஆசனங்களைப் பெறுவதற்கான வியூகங்களை வகுக்க வேண்டும். பின்னர் இரு முக்கிய கட்சிகளும் சுயாதீனமாக முடிவெடுத்துப் பேரம் பேசும் புறக்கணிக்க முடியா முக்கிய சக்தியாக மாறி மிளிர வேண்டும்.

இந்த நாட்டில் யாரும் நூற்றுக்கு நூறு நல்லவர்களோ கெட்டவர்களோ அல்லர். எனவே, சூழலையும் அவ்வப்போது உள்ள அரசியல் நிலைமைகளையும் கருத்திற் கொண்டு எந்தக் கட்சியுடன் இணைவது என்று தீர்மானிக்க வேண்டும். முஸ்லிம்கள் எப்படியும் எம்முடன்தான் இருப்பார்கள் என்ற எண்ணம் எந்தப் பெரிய கட்சிக்கும் இருக்கக் கூடாது. ஏதாவது அநியாயம் அக்கிரமம் நடந்தால் எம்மை விட்டும் போய்விடுவார்கள் என்ற பயம் உள்ளத்தில் இரு கட்சிகளுக்கும் இருந்து கொண்டே இருக்க வேண்டும். இல்லையென்றால் ஒரு கட்சி அநியாயம் செய்யும், அவர்களது இலக்கு பெரும்பான்மை வாக்குகளாக இருக்கும். சிறுபான்மைக் கட்சிகள் அநியாயம் செய்யும் கட்சியுடன் சேர மாட்டார்கள் என்பதையே தமது அரசியல் ஆதாரத்திற்கான அடித்தளமாக அடுத்த கட்சி அமைத்துக் கொள்ளும். எந்த நன்மையும் செய்யாமல் அவர்கள் செய்யும் அநியாயத்தை வைத்தே வாக்கு வங்கியை நிரப்பிக் கொள்வர்.

எனவே, பெரிய முஸ்லிம் கட்சிகள் யாருடன் வேண்டுமானாலும் இணைவார்கள் என்கின்ற நிலை இருந்தால்தான் அரசியலில் சில ஆதாயங்களையும் சில நியாயங்களையும் பெற முடியும்.

ஒரு வகையில் இந்த அரசியல் குழப்பம் சிறுபான்மை சமூகத்திற்கு நல்லதாக அமைந்துள்ளது எனலாம். நல்லதொரு சமூக எழுச்சிக்கு வித்திடுவதற்கும், முஸ்லிம்களின் இருப்பையும் பாதுகாப்பையும் உறுதி செய்வதற்கும் நல்ல திட்டங்களை வகுத்து சிந்தித்து செயலாற்றக் கிடைத்த ஒரு வாய்ப்பாகவும் கருதலாம். எனவே, இத்தருணத்தை பயனுள்ளதாக மாற்றி நன்மையை அடைந்து கொள்ள முஸ்லிம்களாகிய நாமும் சிறுபான்மைக் கட்சிகளும் சிந்தித்து செயலாற்றும் தருணம் இது! எனவே, இந்தக் குழப்பத்தின் முடிவும் நல்லதாக அமைய எல்லாம் வல்ல அல்லாஹ் அருள் புரிவானாக!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.