இயேசுவை இழிவுபடுத்தும் பைபிள் – 5

இயேசு அமைதியான சுபாவம் கொண்டவர்É அடக்கியாளும் குணம் கொண்டவர் அல்ல என்றுதான் குர்ஆன் அவர் குறித்து அறிமுகம் செய்கின்றது. பைபிளும் இயேசு குறித்து இதே கருத்தைக் கூறினாலும் பைபிள் சொல்லும் பல செய்திகள் இயேசுவின் இவ்வற்புத இயல்புக்கு எதிரானதாக அமைந்துள்ளன.

இயேசு முரட்டு சுபாவம் உள்ளவரா?
‘இதோ, உன் ராஜா சாந்த குணமுள்ளவராய், கழுதையின் மேலும் கழுதைக் குட்டியாகிய மறியின் மேலும் ஏறிக்கொண்டு, உன்னிடத்தில் வருகிறார் என்று சீயோன் குமாரத்திக்குச் சொல்லுங்கள்.’ (மத்தேயு 21:4)

இயேசு சாந்த குணமுள்ளவர் என்று இந்த வசனம் கூறுகின்றது. (கழுதையின் மீதும் கழுதைக் குட்டியின் மீதும் ஒருவர் எப்படி ஏறி வர முடியும் என நீங்களும் கேள்வி எழுப்பினால் அதற்கு பைபிள் விளக்கவுரை யாளர்கள்தான் பதில் சொல்ல வேண்டும்.) இந்த வசனத்தின் தொடரில் ஒரு சம்பவம் சொல்லப்படுகின்றது.

இயேசு ஆலயத்துக்குள் வருகின்றார். அங்கே வியாபாரம் நடந்துகொண்டிருக்கின்றது. இயேசு இன்னும் தனது போதனையை ஆரம்பிக்கவே இல்லை. ஆனால், இயேசு ஆலயத்தில் வியாபாரம் செய்யும் அனைவரையும் வெளியில் துரத்துகின்றார். அவர்களின் வியாபாரத் தட்டுக்களைக் கீழே தள்ளி விடுகின்றார். இது குறித்து மத்தேயு இப்படிக் கூறுகின்றார்.

‘இயேசு தேவாலயத்தில் பிரவேசித்து, ஆலயத்திலே விற்கிறவர்களும் கொள்ளுகிறவர் களுமாகிய யாவரையும் வெளியிலே துரத்தி, காசுக்காரருடைய பலகைகளையும் புறா விற்கிறவர்களின் ஆசனங்களையும் கவிழ்த்து,’
‘என்னுடைய வீடு ஜெபவீடு எனப்படும் என்று எழுதியிருக்கிறது. நீங்களோ அதைக் கள்ளர் குகையாக்கினீர்கள் என்றார்’ (மத்தேயு 21:12-13)

இது குறித்து மாற்கு இப்படி விபரிக்கின்றார்.

‘அவர்கள் எருசலேமுக்கு வந்தார்கள். இயேசு தேவாலயத்தில் பிரவேசித்து, ஆலயத்தில் விற்கிறவர்களையும் கொள்ளுகிறவர்களையும் துரத்திவிட்டு, காசுக்காரருடைய பலகைகளையும், புறா விற்கிறவர்களுடைய ஆசனங்களையும் கவிழ்த்து,’

‘ஒருவனும் தேவாலயத்தின் வழியாக யாதொரு பண்டத்தையும் கொண்டுபோகவிடாமல்,’

‘என்னுடைய வீடு எல்லா ஜனங்களுக்கும் ஜெபவீடு எனப்படும் என்று எழுதியிருக்க வில்லையா? நீங்களோ அதைக் கள்ளர் குகையாக்கினீர்கள் என்று அவர்களுக்குச் சொல்லி உபதேசித்தார்.’
(மாற்கு 11:15-17)

இங்கே தேவாலய வழியாக யாரும் எந்தப் பண்டங்களையும் கொண்டு போகாமல் தடுக்கப்பட்டதாகக் கூறப்படுகின்றது.

இது குறித்து யோவான் சற்று கடுமையாகவே கூறுகின்றார்.

‘தேவாலயத்திலே ஆடுகள் மாடுகள் புறாக்களாகிய இவைகளை விற்கிறவர்களையும், காசுக்காரர் உட்கார்ந்திருக்கிறதையும் கண்டு,’

‘கயிற்றினால் ஒரு சவுக்கையுண்டுபண்ணி, அவர்கள் யாவரையும் ஆடுமாடுகளையும் தேவாலயத்துக்குப் புறம்பே துரத்திவிட்டு, காசுக்காரருடைய காசுகளைக் கொட்டி, பலகைகளைக் கவிழ்த்துப்போட்டு,’
‘புறாவிற்கிறவர்களை நோக்கி: இவைகளை இவ்விடத்திலிருந்து எடுத்துக் கொண்டு போங்கள்; என் பிதாவின் வீட்டை வியாபார வீடாக்காதிருங்கள் என்றார்.’ (யோவான் 2:14-16)

கயிற்றினால் சவுக்கை செய்து அவர்களை அடித்து விரட்டியுள்ளார்கள். ஆலயத்திற்குள் வியாபாரம் செய்யலாகாது என்பதில் எமக்கு மாற்றுக் கருத்தில்லை.

‘பள்ளியில் யாராவது விற்பதையும் வாங்குவதையும் கண்டால் அல்லாஹ் உனது வியாபாரத்தில் இலாபத்தை இல்லாமலாக்கி விடட்டும் என்று கூறுங்கள் என நபி(ச) அவர்கள் கூறினார்கள்.’ (அறிவிப்பவர்: அபூஹுரைரா(வ), ஆதாரம்: திர்மிதி 1243)

எனவே, இஸ்லாமும் ஆலயத்திற்குள் வர்த்தகம் செய்யக் கூடாது என்றுதான் கூறுகின்றது. ஆனால் சாந்த குணம் கொண்ட இயேசு சாட்டையால் அடித்து ஆடு, மாடுகளை விரட்டி, தட்டுக்களைக் கவிழ்த்து மக்களை விரட்டியிருப்பார்களா? என்றால் இது இயேசுவின் உயர்வான இயல்புக்கு ஏற்ற செய்தியாக இல்லை. பைபிள் கூறும் இந்தத் தகவல் இயேசுவை முரட்டு சுபாவம் உள்ளவராகவும், அடக்கியாளும் குணம் கொண்டவராகவும் சித்தரிக்கின்றது.

இயேசுவின் உண்மையான இயல்புக்கு மாற்றமான இந்தத் தகவலை நம்பினால் இயேசுவை இழிவாக நோக்க நேரிடும். இஸ்லாம் இயேசுவை கண்ணியப் படுத்துகின்றது. பைபிள் அவரை களங்கப்படுத்துகின்றது. இயேசு மீது உண்மையான அன்புள்ளவர்கள் பைபிளை ஏற்று இயேசுவை இழிவுபடுத்தப் போகின்றார்களா? அல்லது பைபிளின் இந்தச் செய்தி பொய்யெனக் கூறி இயேசுவை கண்ணிய்படுத்தப் போகின்றார்களா?

இயேசு இனவாதியா?
இயேசு இஸ்ரவேல் சமுதாயத்திற்குத் தூதராக அனுப்பப்பட்டவர் எனக் குர்ஆன் கூறுகின்றது.

‘இஸ்ராயீலின் சந்ததியினருக்கு ஒரு தூதராகவும் (அவரை ஆக்குவான். அவர் அவர்களிடம்) ‘நிச்சயமாக நான் உங்களுக்கு, உங்கள் இரட்சகனிடமிருந்து ஒரு அத்தாட்சியைக் கொண்டு வந்துள்ளேன்’. நான் உங்களுக்காக களிமண்ணால் ஒரு பறவையின் தோற்றத்தைப் போல் உருவாக்கி, பின்னர் அதில் ஊதுவேன். உடனே அல்லாஹ் வின் உத்தரவினால் அது (உயிருள்ள) பறவையாக ஆகிவிடும்.  அல்லாஹ்வின் உத்தரவுப் பிரகாரம் பிறவிக் குருடரையும் குஷ்டரோகியையும் குணப்படுத்துவதுடன் மரணித்தோரை யும் உயிர்ப்பிப்பேன். இன்னும், நீங்கள் உண்ணுபவற்றையும் உங்கள் இல்லங்களில் நீங்கள் சேமித்து வைப்பவற்றையும் நான் உங்களுக்கு அறிவிப்பேன். நீங்கள் நம்பிக்கையாளர்களாக இருந்தால், நிச்சயமாக இதில் உங்களுக்கு ஓர் அத்தாட்சி இருக்கின்றது’ (எனக் கூறினார்.)’ (3:49)

பைபிளும் அவர் இஸ்ரவேல் சமூகத்திற்கு அனுப்பப்பட்ட தூதர் என்றே கூறுகின்றது.

‘அதற்கு அவர்: காணாமற்போன ஆடுகளாகிய இஸ்ரவேல் வீட்டாரிடத்திற்கு அனுப்பப்பட்டேனேயன்றி, மற்றப்படியல்ல என்றார்.’
(மத்தேயு 15:24)

‘காணாமற் போன ஆடுகளாகிய இஸ்ரவேல் வீட்டாரிடத்திற்குப் போங்கள்.’ (மத்தேயு 10:6)

இயேசு இஸ்ரவேல் சமூகத்திற்கு வழிகாட்ட ஏக வல்லவனால் அனுப்பப்பட்ட இறைத்தூதர் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. இவ்வாறு ஒரு தூதர் அனுப்பப்பட்டால் அவரின் போதனைகளை ஏற்று நடப்பது அம்மக்கள் மீது கட்டாயக் கடமையாகும். ஆயினும், அந்த இறைத்தூதர் ஏனைய சமூகங்களுக்கும் மனித நேயப் பணிகளைச் செய்யலாம். இதோ இந்த சம்பவத்தைப் பாருங்கள்.

‘அப்பொழுது, அந்தத் திசைகளில் குடியிருக்கிற கானானிய ஸ்திரீ ஒருத்தி அவரிடத்தில் வந்து: ஆண்டவரே, தாவீதின் குமாரனே, எனக்கு இரங்கும், என் மகள் பிசாசினால் கொடிய வேதனைப்படுகிறாள் என்று சொல்லிக் கூப்பிட்டாள்.’

‘அவளுக்குப் பிரதியுத்தரமாக அவர் ஒரு வார்த்தையும் சொல்லவில்லை. அப்பொழுது அவருடைய சீஷர்கள் வந்து: இவள் நம்மைப் பின் தொடர்ந்து கூப்பிடுகிறாளே, இவளை அனுப்பிவிடும் என்று அவரை வேண்டிக்கொண்டார்கள்.’

‘அதற்கு அவர்: காணாமற்போன ஆடுகளாகிய இஸ்ரவேல் வீட்டாரிடத்திற்கு அனுப்பப்பட்டேனேயன்றி, மற்றப்படியல்ல என்றார்.’

‘அவள் வந்து: ஆண்டவரே, எனக்கு உதவிசெய்யும் என்று அவரைப்பணிந்து கொண்டாள்.’

‘அவர் அவளை நோக்கி: பிள்ளைகளின் அப்பத்தை எடுத்து, நாய்க்குட்டிகளுக்குப் போடுகிறது நல்லதல்ல என்றார்.’

‘அதற்கு அவள்: மெய்தான் ஆண்டவரே, ஆகிலும் நாய்க்குட்டிகள் தங்கள் எஜமான்களின் மேஜையிலிருந்து விழுகிற துணிக்கைகளைத் தின்னுமே என்றாள்.’
‘இயேசு அவளுக்குப் பிரதியுத்தரமாக: ஸ்திரீயே, உன் விசுவாசம் பெரிது நீ விரும்புகிறபடி உனக்கு ஆகக்கடவது என்றார். அந்நேரமே அவள் மகள் ஆரோக்கியமானாள்.’ (மத்தேயு 15:22-28)

இந்த சம்பவத்தில் இயேசு பிள்ளைகளின் அப்பத்தை எடுத்து நாய் குட்டிகளுக்குப் போடுகிறது நல்லதல்ல என்று கூறியதாக வருகின்றது. இயேசு இஸ்ரவேலர், சமூகத்தை பிள்ளைக்கும் ஏனைய சமூகத்தினரை நாய்க்குட்டிக்கும் ஒப்பிட்டுப் பேசுகின்றார். உண்மையில் இயேசு ஒரு இனவாதியாக செயற்பட்டதாக இந்த சம்பவம் சொல்கின்றது. ஒரு இறைத்தூதர் இப்படி இனவாதியாக செயற்பட்டிருப்பாரா என்றால் இல்லையென்றே இஸ்லாம் கூறுகின்றது.

இந்த சம்பவத்தை ஏற்றுக் கொண்டால் இயேசுவை இனவாதியாகப் பார்க்க வேண்டும். அடுத்து, இயேசுதான் இஸ்ரவேல் சமூகத்திற்கு அனுப்பப்பட்டதாகக் கூறும் போது கிறிஸ்தவ போதகர்கள் இஸ்ரவேல் அல்லாத ஏனைய சமூகத்தாருக்கு எப்படி பைபிளில் போதிக்க முடியும் என்பது குறித்தும் சிந்திக்க வேண்டும்.

இச்சம்பவத்தை உண்மை என ஏற்று இயேசுவை இனவாதியாகப் பார்ப்பதா அல்லது இச்சம்பவத்தை மறுத்து இயேசுவின் கண்ணியம் காப்பதா என்பதை கிறிஸ்தவ சகோதரர்கள்தான் தீர்மானிக்க வேண்டும்.

இயேசு இழிவாகப் பேசுபவரா?

இயேசு அவர் கால மக்களை விழித்துப் பேசிய பேச்சுக்கள் அல்குர்ஆன், பைபிள் இரண்டிலும் இடம்பெற்றுள்ளன. இயேசு ஒரு இறைத்தூதர், அன்பானவர், அமைதியானவர், இவரின் பேச்சுக்களும் அவரது இவ்வழகிய சுபாவத்திற்கு ஏற்றதாக இருந்திருக்க வேண்டும். பைபிள் இயேசுவை இழிவாகப் பேசும் இயல்புடையவர் என்றே அறிமுகப்படுத்துகின்றது. முதலில் இயேசுவின் பேச்சுக்கள் சிலவற்றை குர்ஆனில் இருந்து நோக்குவோம்.

‘இஸ்ராஈலின் சந்ததிகளே! நிச்சயமாக நான் எனக்கு முன்னுள்ள தவ்றாத்தை உண்மைப்படுத்துப வராகவும், எனக்குப் பின்வரும் ‘அஹ்மத்’ என்ற பெயரையுடைய ஒரு தூதர் பற்றி நன்மாராயம் கூறுபவராகவும் உங்களிடம் (அனுப்பப்பட்ட) அல்லாஹ் வின் தூதராவேன்’ என மர்யமின் மகன் ஈஸா கூறியதை (நபியே! நீர் எண்ணிப்பார்ப்பீராக!)  அவர் தெளிவான சான்றுகளுடன் அவர்களிடம் வந்தபோது, ‘இது தெளிவான சூனியமே’ என அவர்கள் கூறினர்.’ (61:6)

‘நம்பிக்கை கொண்டோரே! மர்யமின் மகன் ஈஸா ‘ஹவாரிய்யூன்’ (எனும் தனது சீடர்)களிடம் அல்லாஹ்வுக்காக எனக்கு உதவி செய்வோர் யார்? எனக் கேட்ட போது அச்சீடர்கள், ‘நாங்கள் அல்லாஹ்வின் உதவியாளர்கள்’ என்று கூறியது போன்று நீங்களும் அல்லாஹ்வின் உதவியாளர்க ளாகிவிடுங்கள். இஸ்ராஈலின் சந்ததிகளில் ஒரு கூட்டத்தினர் நம்பிக்கை கொண்டனர். மற்றொரு கூட்டத்தினர் நிராகரித்தனர். எனவே, நம்பிக்கை கொண்டோரை, அவர்களது எதிரிகளுக்கெதிராக நாம் உறுதிப்படுத்தினோம். அதனால் அவர்கள் வெற்றியாளர் களாக மாறிவிட்டனர்.’ (61:14)

”மர்யமின் மகன் மஸீஹ்தான் நிச்சயமாக அல்லாஹ்’ எனக் கூறியோர் நிராகரித்து விட்டனர். ‘இஸ்ராஈலின் சந்ததியினரே! எனது இரட்சகனும் உங்களது இரட்சகனுமாகிய அல்லாஹ்வையே வணங்குங்கள்’ என்று மஸீஹ் கூறினார். நிச்சயமாக யார் அல்லாஹ்வுக்கு இணைவைக்கின்றானோ அவனுக்கு அல்லாஹ் சுவர்க்கத்தைத் தடுத்துவிடுவான். அவனது ஒதுங்குமிடம் நரகமே! அநியாயக்காரர்களுக்கு எந்த உதவியாளர்களும்  இல்லை.’ (5:72)

‘இஸ்ராயீலின் சந்ததியினருக்கு ஒரு தூதராகவும் (அவரை ஆக்குவான். அவர் அவர்களிடம்) ‘நிச்சயமாக நான் உங்களுக்கு, உங்கள் இரட்சகனிடமிருந்து ஒரு அத்தாட்சியைக் கொண்டு வந்துள்ளேன்’. நான் உங்களுக்காக களிமண்ணால் ஒரு பறவையின் தோற்றத்தைப் போல் உருவாக்கி, பின்னர் அதில் ஊதுவேன். உடனே அல்லாஹ்வின் உத்தரவினால் அது (உயிருள்ள) பறவையாக ஆகிவிடும்.  அல்லாஹ்வின் உத்தரவுப் பிரகாரம் பிறவிக் குருடரையும் குஷ்டரோகியையும் குணப்படுத்துவதுடன் மரணித்தோரையும் உயிர்ப்பிப்பேன். இன்னும், நீங்கள் உண்ணுபவற்றையும் உங்கள் இல்லங்களில் நீங்கள் சேமித்து வைப்பவற்றையும் நான் உங்களுக்கு அறிவிப்பேன். நீங்கள் நம்பிக்கையாளர்களாக இருந்தால், நிச்சயமாக இதில் உங்களுக்கு ஓர் அத்தாட்சி இருக்கின்றது’ (எனக் கூறினார்.)’

‘எனக்கு முன் இருக்கும் தவ்றாத்தை உண்மைப்படுத்துபவனாகவும் உங்களுக்குத் தடுக்கப் பட்டிருந்த சிலவற்றை உங்களுக்கு ஆகுமாக்குவதற் காகவும் (உங்களிடம் நான் வந்துள்ளேன்.) இன்னும், ஓர் அத்தாட்சியையும் உங்கள் இரட்சகனிடமிருந்து உங்களுக்குக் கொண்டு வந்துள்ளேன். எனவே, அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள், எனக்கும் கட்டுப்படுங்கள்.’ (3:49-50)

இவை இயேசுவின் போதனைகள் பற்றிக் குர்ஆன் குறிப்பிடும் சில செய்திகளாகும்.

இயேசு மக்களை விழித்துப் பேசும் போது இஸ்ராயீலின் சந்ததிகளே! என கண்ணியமாக விழித்துப் பேசியுள்ளார். இயேசுவின் பேச்சு நடை எப்படி இருந்தது என பைபிள் கூறுவதை இன்ஷh அல்லாஹ் அடுத்த இதழில் எதிர்பாருங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.