அல்குர்ஆன் விளக்கம் | அல்குர்ஆனின் மகத்துவமிக்க ஆயத்து.

‘(உண்மையாக) வணங்கப்படத் தகுதியானவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் இல்லை. அவன் என்றும் உயிருடன் இருப்பவன், நிலைத்திருப்பவன். சிறு தூக்கமோ, பெரும் தூக்கமோ அவனை ஆட்கொள்ளாது. வானங்களில் உள்ளவையும் பூமியில் உள்ளவையும் அவனுக்கே உரியன. அவனது அனுமதியின்றி அவனிடம் யார்தான் பரிந்துரை செய்யமுடியும்? (படைப் பினங்களான) அவர்களுக்கு முன் உள்ளவற்றையும் அவர்களுக்குப்பின் உள்ளவற்றையும் அவன் நன்கறிவான். அவன் நாடியவற்றைத் தவிர, அவன் அறிந்திருப்பவற்றில் எதையும் அவர்களால் அறியமுடியாது. அவனது ‘குர்ஸி” வானங்களையும் பூமியையும் வியாபித்திருக்கின்றது. அவையிரண்டையும் பாதுகாப்பது அவனுக்கு சிரமமன்று. அவன் மிக உயர்ந்தவன்; மிக்க மகத்துவ மானவன்.” (2:255)

அல்குர்ஆனில் உள்ள மகத்துவமிக்க ஆயத்தாக இது அமைந்துள்ளது. காலை, மாலை மற்றும் ஐவேளைத் தொழுகையின் பின்னர் என ஒரு நாளில் பல விடுத்தங்கள் ஓதப்படும் வசனமாகவும் இது அமைந்துள்ளது. கெட்ட ஷைத்தான்களிடமிருந்து பாதுகாப்புத் தேடுவதற்குரிய வசனமாகவும் இது அமைந்துள்ளது.

இந்த வசனம் அல்லாஹ்வைச் சிறப்பாக அறிமுகம் செய்கின்றது. வணக்கத்திற்குரியவன் அல்லாஹ் ஒருவனைத் தவிர வேறு யாரும் இல்லை என்று கூறிவிட்டு எல்லாம் வல்ல இறைவன் பற்றி சில செய்திகள் கூறுகின்றது.

சில மதங்கள் கடவுள் பற்றிக் கூறும் கற்பனைக் கதைகளைக் கேட்கும் கல்வியலாளர்கள் கடவுளே இல்லை, கடவுளைக் கற்பிப்பவன் முட்டாள் என்று கூறியிருக்கின்றனர். கடவுள் என்பவன் பசி, தாகம், பயம், தூக்கம், சோர்வு, துக்கம், இயலாமை, அறியாமை போன்ற குணங்கள் கொண்டவனாகச் சித்தரிக்கப் படுகின்றான். இதனால் கடவுளே இல்லை என்ற முடிவுக்கு சிலர் வந்துவிடுகின்றனர்.

இங்கு அல்லாஹ்வைப் பற்றி அறிமுகம் செய்யும் போது அவன் நித்திய ஜீவன் -அல் ஹைய்யு- என்று கூறப்படுகின்றது. ‘ஹயாத்” எனும் வாழ்வு அவனுக்குண்டு என்னும் இவ்வார்த்தை பார்வை, செவிப்புலன், அறிவு, அனைத்திலும் முழுமை பெற்றவனாக இறைவன் இருப்பதை இது காட்டுகின்றது.

அடுத்து, ‘அல்கையூம்” – நிலைத்திருப்பவன். தனது விருப்பத்தை செய்து முடிக்கும் ஆற்றல்கள் உள்ளவன். அவன் நாடியதை நாடிய நேரத்தில் நாடிய விதத்தில் செய்து முடிப்பான் என்பதை இந்த வார்த்தை உணர்த்துகின்றது. இந்த அடிப்படையில் ‘அல் ஹய்யுல் கையூம்” என்ற இரண்டு வார்த்தைகளும் அல்லாஹ்வுடைய அழகுத் திருநாமங்கள் மற்றும் அவனது பண்புகள் அனைத்தையும் உள்ளடக்கக் கூடிய இரு வார்த்தைகள் என அறிஞர்களால் வர்ணிக்கப் படுகின்றன.

அடுத்து, அல்லாஹ்வுக்குத் தூக்கமோ, தூக்கத்திற்கு முந்திய சிறு தூக்கமோ கிடையாது என்பதால் மனித பலவீனங்களுக்கு கடவுள் அப்பாற்பட்டவன் என்று கூறப்படுகின்றது.

தொடர்ந்து வானம், பூமியில் உள்ள அனைத்துமே அவனுக்குரியன. அவனிடம் யாரும் அவனது அனுமதியின்றி பரிந்துரை செய்ய முடியாது. படைப்பினங்களுக்கு முன்னால் உள்ளது, பின்னால் நடப்பது அனைத்தையும் அறிந்தவன். அவனது மறைவான விடயங்களை அவன் வெளிப்படுத்தினாலே தவிர வேறு யாராலும் அறிய முடியாது! அவனது ‘குர்ஸி” என்பது வானங்கள், பூமிகள் அளவு விசாலமானது! வானம், பூமிகளைப் பாதுகாப்பதும் பரிபாலிப்பதும் அவனுக்குச் சிரமமானது அன்று என அவனது ஆற்றல்கள் விபரிக்கப்படுகின்றன. கடவுளை உரிய முறையில் அறிமுகம் செய்திருந்தால் நாஸ்திக சிந்தனை பரவுவதை ஓரளவு தவிர்த்திருக்கலாம். எல்லாம் வல்ல ஆற்றல் மிக்க இறைவனை மனித பண்புகளுடன் ஒப்பிட்டு அறிமுகம் செய்தமை ஆனமீக வரலாற்றில் ஏற்பட்ட மிகப்பெரும் தவறும், அநீதியுமாகும் எனலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.