அல்குர்ஆன் பார்வையில் ஸஹாபாக்கள்

நபி(ஸல்) அவர்களது காலத்தில் வாழ்ந்து இஸ்லாத்தை ஏற்று நபி(ஸல்) அவர்களைச் சந்தித்து இஸ்லாத்திலேயே மரணித்தவர்கள்தான் ஸஹாபாக்கள் என அழைக்கப்படுகின்றனர். ஸாஹிப் என்றால் நண்பர் என்பது அர்த்தமாகும். ஸஹாபா என்றால் நபி(ஸல்) அவர்களின் நண்பர், தோழர் என்பது அர்த்தமாகும்.

இவ்வகையில் ஸஹாபி என்றால் நபித்தோழர் என்பது அர்த்தமாகும். அல்லாஹ்வின் தூதரின் தோழர்களாக அல்லாஹ்வால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களாக அவர்கள் இருப்பதே அவர்களின் சிறப்பிற்கும். அந்தஸ்த்திற்கும், நேர்வழிக்கும் சிறந்த எடுத்துக்காட்டாகும்.

இஸ்லாத்தில் தோன்றிய எந்த வழிகெட்ட அமைப்பாக இருந்தாலும் அந்த அமைப்புக்கள் நபித்தோழர்களை உரிய முறையில் மதிக்காதவர்களாகவே இருந்தனர். ஷீயாக்கள், கவாரிஜ்கள் போன்ற வழிகெட்ட அமைப்புக்கள் நபித்தோழர்களில் அதிகமானவர்களைக் காபிர்கள், முர்த்தத்துகள் என வாய் கூசாமல் கூறினர். முஃதஸிலாக்கள், முர்ஜியாக்கள், அஷ;அரியாக்கள் போன்ற வழிகெட்ட அமைப்புக்கள் அல் குர்ஆன், சுன்னாவுக்கு நபித் தோழர்கள் வழங்கிய கருத்துக்களுக்கும், விளக்கங்களுக்கும் உரிய முக்கியத்துவம் அளிக்காததினால் தான் வழிகெட்டுப் போயினர். இவர்கள் நபித்தோழர்களை விட நாமே குர்ஆன், சுன்னாவை சரியாக விளங்கியவர்கள் என்று கூறுவது போல் நடந்து கொண்டனர்.
நபித்தோழர்களை உரிய முறையில் மதிக்காத சில அமைப்பினர் நபித்தோழர்களுக்கும் உரிய முறையில் மார்க்கத்தை விளங்கத் தெரியவில்லை, அவர்கள் தமக்குள் சண்டையிட்டுக் கொண்டனர், காபிர்களைப் போல் ஒருவரை ஒருவர் வெட்டிக் கொண்டு செத்தனர், அவர்களுக்கு அலக் என்பதற்கு உண்மையான விளக்கம் தெரியுமா? பிர்அவ்னின் உடம்பு இன்றுவரை பாதுகாக்கப்பட்டிருப்பது தெரியுமா? என்று கேள்வி எழுப்பி நபித்தோழர்களை விட தான் தான் குர்ஆன், ஹதீஸை சரியாகப் புரிந்து கொண்டவன் என்பதை நிலை நாட்ட முற்படுகின்றனர்.
இந்த சிந்தனை வழிகேட்டின் அடையாளமாகும். நபித்தோழர்களைக் குறைகாணும் எந்தத் தனி நபரும், அமைப்பும் வழிகேட்டின் ஏதாவதொரு படுகுழியில் வீழ்ந்ததாகவே இருக்க முடியும். நேர்வழி பெற்றவர்கள், அல்லாஹ்வால் பொருந்திக் கொள்ளப்பட்டவர்கள் என குர்ஆன் கூறுபவர்களைக் குறைகாண்பவர்கள் அல்லாஹ்வின் பொருத்தத்திற்கும், நேர்வழிக்கும் அப்பாற்பட்டவர்களாகவே இருக்க முடியும்.
இந்த உண்மையை உணர்த்துமுகமாக அல்குர்ஆனின் பார்வையில் ஸஹாபாக்கள் என்ற இந்த ஆக்கம் வரையப்படுகின்றது.
பெரிய சாட்சி:
ஒருவரை நல்லவர் என ஒரு நல்லவர் சாட்சி கூறினால் அதை நாம் ஏற்றுக் கொள்கின்றோம். சாட்சி சொல்பவரைப் பொறுத்துத்தான் சாட்சிக்கு அந்தஸ்த்து வழங்கப்படும். சாட்சியிலே பெரிய சாட்சி அல்லாஹ்வின் சாட்சியாகும்.

”மிகப்பெரும் சாட்சியம் எது?’ என்று (நபியே) நீர் கேட்டு, ‘அல்லாஹ்வே எனக்கும் உங்களுக்குமிடையில் சாட்சியாளன்’ என்று கூறுவீராக!’ (6:19)
நபித்தோழர்கள் குறித்த உண்மையை உறுதி செய்ய இந்த வழிகெட்ட அமைப்புக்களுக்கும் எமக்குமிடையில் அல்லாஹ்வே பெரிய சாட்சியாளனாவான்! இதோ அல்லாஹ்வின் சாட்சியைப் பாருங்கள்.
01. ‘நிச்சயமாக உங்களிடம் அல்லாஹ்வின் தூதர் இருக்கிறார் என்பதை அறிந்து கொள்ளுங்கள். அவர் உங்களுக்கு அதிகமான விடயங்களில் கட்டுப்பட்டிருந்தால் நீங்கள் சிரமப்பட்டிருப்பீர்கள். எனினும், அல்லாஹ் உங்களுக்கு ஈமானை நேசத்திற்குரியதாக ஆக்கி, அதனை உங்களது உள்ளங்களில் அழகுபடுத்தினான். மேலும், நிராகரிப்பையும், பாவம் செய்வதையும், மாறு செய்வதையும் அவன் உங்களுக்கு வெறுப்புடையதாக ஆக்கினான். அவர்கள்தாம் நேர்வழி பெற்ற வர்கள்’ (49:7)
நபித்தோழர்களுக்கு ‘குப்ர்’ வெறுப்புக் குரியதாக்கப்பட்டுள்ளது. மற்றும் பாவம் செய்வதும், மாறு செய்வதும் கூட வெறுப்புக்குள்ளாக்கப்பட்டு ஈமான் அவர்களுக்கு நேசத்திற்குரியதாக்கப் பட்டுள்ளது. அல்லாஹ் அவர்களுக்கு குப்ரையும் பிஸ்க்கையும், இஸ்யானையும் வெறுப்புக்குள்ளாக்கி யிருக்கும் போது, இந்த வழிகெட்ட பிரிவினர் ஸஹாபாக்களில் அதிகமானவர்கள் காபிர்கள் என்றும் பாவிகள் என்றும் மாறு செய்தவர்கள் என்றும் கூறுகின்றனர். அல்லாஹ் சொல்வதை ஏற்பதா? இந்த வழிகெட்ட அமைப்பினர் சொல்வதை ஏற்பதா? சில அமைப்புக்கள் ஷPயாக்கள், கவாரிஜ்கள் போன்று அவர்களைக் காபிர்கள் என்று கூறாவிட்டாலும் பாவிகள், மாறு செய்தவர்கள் என்று கூறுகின்றனர். அல்லாஹ் சொல்வது உண்மையென்றால் இவர்கள் பொய்யர்கள். இவர்கள் சொல்வது தான் உண்மை என்றால் அல்லாஹ் பொய்யன் என்று கூற வேண்டும். யாரை உண்மையாளன் என்று கூறப்போகின்றீர்கள்? இவர்களை உண்மைப்படுத்தி அல்லாஹ்வைப் பொய்யன் என்று கூறப்போகின்றீர்களா?
02. ‘மனிதர்களுக்காகத் தோற்றுவிக்கப்பட்ட சிறந்த சமுதாயமாக நீங்கள் இருக்கின்றீர்கள். (ஏனெனில்) நீங்கள் நன்மையை ஏவுகின்றீர்கள். தீமையை விட்டும் தடுக்கின்றீர்கள். மேலும், நீங்கள் அல்லாஹ்வை நம்பிக்கை கொள்கின்றீர்கள்’ (3:110)
அல்லாஹ் அவர்களைச் சிறந்த சமூகம் என்று கூறுகின்றான். அவர்கள் இருந்தது போல் இருக்கும் அனைவரும் இந்த சிறந்த சமூகத்தில் சேர்ந்து கொள்வர். ஆனால் சிறந்த சமூகம் என அல்லாஹ் நேரடியாக அவர்கள் குறித்துத்தான் சான்று கூறினான். அல்லாஹ் அவர்களைச் சிறந்த சமூகம் என்று கூறியிருக்க சிலர் அவர்களை ‘கெட்ட சமூகம்’ என சித்தரிக்க முற்படுகின்றனர். அவர்கள் அநியாயம் செய்தவர்கள், அக்கிரமம் புரிந்தவர்கள், சூழ்ச்சி செய்தவர்கள், பதவி மோகம் கொண்டவர்கள் எனக் கூறுகின்றனர்.
சிறந்த சமூகம் என்ற அல்லாஹ்வின் சாட்சியத்தை ஏற்கப்போகின்றீர்களா? அல்லது இவர்கள் கூறும் பொய்யை ஏற்கப் போகின்றீர்களா? அல்லாஹ் கூறுவது உண்மை என்றால் இவர்கள் கூறுவது பொய் தானே!
03. ‘அவர்கள் உமக்குச் சதி செய்ய நாடினால் நிச்சயமாக அல்லாஹ்வே உமக்குப் போதுமானவன். அவனே தனது உதவியினைக் கொண்டும், நம்பிக்கையாளர்களைக் கொண்டும் உம்மைப் பலப்படுத்தினான்’ (8:62)
அல்லாஹுத் தஆலா தனது உதவியைக் கொண்டும், நபித்தோழர்களைக் கொண்டும் நபியைப் பலப்படுத்தியதாகக் கூறுகின்றான். நபித்தோழர்கள் காபிர்களாக, முர்த்ததுகளாக, பாவிகளாக, பதவி மோகம் கொண்டவர்களாக, ரௌடிகளாக இருந்தார்களென்றால் நபியைப் பலப்படுத்த அல்லாஹ் அவர்களைத் தேர்ந்தெடுத்திருப்பானா? அல்லது அல்லாஹுத் தஆலாவின் தேர்வு தவறானது என்று இவர்கள் கூறப்போகின்றனரா?
04. ‘ எவர்கள் நம்பிக்கை கொண்டு, ஹிஜ்ரத் செய்து, அல்லாஹ்வின் பாதையில் அறப் போரும் புரிந்தனரோ அவர்களும், எவர்கள் புகலிடம் அளித்து, உதவியும் செய்தார்களோ அவர்களுமே உண்மையான நம்பிக்கையாளர்களாவர். அவர்களுக்கு மன்னிப்பும், கண்ணியமான ஆகாரமும் உண்டு’ (8:74)
முஹாஜிர்களையும், அன்ஸார்களையும் உண்மையான முஃமின்கள் என்று அல்லாஹ் சாட்சி கூறுகின்றான். ஷPயாக்கள், கவாரிஜ்கள் போன்ற வழிகேடர்கள் அவர்களைக் காபிர்கள் என்கின்றனர். யார் சொல்வதை நம்புவது? வழிகேடர்கள் சொல்வதை நம்பி அல்லாஹ் கூறுவதைப் பொய் என்று கூறலாமா? மற்றும் சில வழிகேடர்கள் உண்மையான முஃமிக்களுக்குரிய பண்பு அற்றவர்களாக அன்சாரிகளையும், முஹாஜிர் களையும் சித்தரிக்க முற்படுகின்றனர். அல்லாஹ் சொல்வதை நம்புபவர்கள் இந்த தடம் புரண்டவர்களின் உளறல்களைக் கண்ணியப்படுத்த முடியுமா?
அல் குர்ஆனில் சுமார் தொண்ணூறு இடங்களில் நபித்தோழர்களின் ஈமான் உறுதி செய்யப் படுகின்றது.
பல இடங்களில் அல்லாஹ் அவர்களை நம்பிக்கையாளர்களே என அழைக்கின்றான். மற்றும் பல இடங்களில் அவர்களை நம்பிக்கையாளர்கள் என்று கூறுகின்றான். (3:121, 124, 164, 171, 179, – 4: 84, 95, 115, – 8: 17, 62, 64,65 – 9: 26, 72, 79, 107, 128, – 15: 88, – 24: 30….)
அல்லாஹ்வால் நம்பிக்கையாளர்கள் என உத்தரவாதம் அளிக்கப்பட்டவர்களை முஃமின்கள் இல்லை என்றோ முஃமின்களின் பண்புகளுக்கு அப்பாற்பட்டவர்கள் என்றோ கூற முடியுமா?
அல்லாஹ் அவர்களை முஃமின்கள் என்று கூறுகின்றான் என்றால் அவர்கள் நம்பிக்கை கொண்ட முறை சரியென்பதால் தானே அவ்வாறு கூறுகின்றான். அவர்கள் நம்பிக்கை கொண்டதை தவறு என்று இன்று நேற்று வந்த வழிகேடர்கள் கூறுவதை எப்படி நாம் சரிகாண முடியும்?
05. ‘இத்தூதர் தனது இரட்சகனிடமிருந்து தனக்கு இறக்கப்பட்டதை நம்பிக்கை கொண்டுள்ளார். முஃமின்களும் (நம்பிக்கை கொண்டுள்ளனர். அவர்கள்) அனைவரும் அல்லாஹ்வையும், அவனது வானவர் களையும், அவனது வேதங்களையும், அவனது தூதர்களையும் நம்பிக்கை கொண்டுள்ளனர். ‘அவனது தூதர்களில் எவருக்குமிடையில் வேறுபாடு; காட்டமாட்டோம். நாம் செவியேற்றோம், கட்டுப்பட்டோம், எங்கள் இரட்சகனே! உனது மன்னிப்பைக் கோருகிறோம். உன்னிடமே மீளுதல் உள்ளது’ என்றும் கூறுகின்றனர்’ (2: 285)
இந்த வசனத்தில் நபித்தோழர்கள் அல்லாஹ்வால் இறக்கப்பட்டதை நம்பினார்கள் என்றும் அவர்கள் அல்லாஹ்வையும், மலக்குகளையும், அவனது வேதங்களையும், தூதர்களையும் நம்பினார்கள் என அல்லாஹ் சாட்சி கூறுகின்றான். அல்லாஹ்வையும், மலக்குகளையும், வேதங்களையும், தூதர்களையும் எப்படி நம்ப வேண்டும் என்பதற்கான முன் உதாரணத்தை நாம் நபித்தோழர்களிடம் பெறுவதை இந்த வசனம் சரிகாண்கின்றது. இன்று வந்த சிலர் நபித்தோழர்கள் அல்லாஹ்வைப் பற்றி நம்பியது தவறு மலக்குகள் பற்றி நம்பியது தவறு, வேதம் பற்றி நம்பியது தவறு, தூதர்கள் பற்றி நம்பியது தவறு, அல்லாஹ்விடமிருந்து இறக்கப்பட்டதை அவர்கள் நம்பியது தவறு நான் தான் இதையெல்லாம் சரியாக விளங்கி நம்புகின்றேன் என்று கூறினால் அல்லாஹ்வின் சாட்சியத்தை ஏற்பதா? இவர்களின் உளறலை ஏற்பதா? நபித்தோழர்கள் செவிசாய்த்தோம், கட்டுப்பட்டோம் என்று கூறினார்கள் என அல்லாஹ் கூறுவதன் மூலம் நபித்தோழர்கள் ஏவப்பட்டதைப் புரிந்து கொண்டு செயல்படுத்தினார்கள் என்பதை அல்லாஹ் உறுதி செய்கின்றான். இந்த அடிப்படையில் நபி மொழிகளுக்கான நடைமுறை விளக்கமாக நபித்தோழர்களின் செயல்கள் இருப்பதை இந்த வசனம் உறுதி செய்கின்றது.
நபித்தோழர்கள் யார்? அவர்களுக்கும் இந்த மார்க்கத்திற்கும் என்ன சம்பந்தம் எனக் கேட்கும் இவர்கள் நபித்தோழர்கள் சொல்வதை எடுக்கக்கூடாது நான் சொல்வதைத் தான் எடுக்க வேண்டும் என்று கூறினால் அதை உண்மைப்படுத்த முடியுமா?
(இந்த வசனத்தின் இறுதிப்பகுதி நபித்தோழர்களும் மனிதர்கள். அவர்களுக்கும் தவறுகள் நடக்கும் என்பதையும் மறுக்கவில்லை என்பதைக் கவனத்திற் கொள்ளவும்)
06. ‘(நம்பிக்கை கொண்டோரே!) நீங்கள் எவற்றைக் கொண்டு நம்பிக்கை கொண்டீர்களோ, அதே போன்று அவர்களும் நம்பிக்கை கொண்டால், நிச்சயமாக அவர்கள் நேர்வழி பெறுவர். அவர்கள் புறக்கணித்தால், அவர்கள் முரண்பாட்டிலேயே இருப்பர். எனவே, அவர்களிலிருந்து உம்மைக் காப்பாற்ற அல்லாஹ்வே போதுமானவன். அவன் (யாவற்றையும்) செவியுறுபவனும். நன்கறிந்தவனுமாவான்’ (2:137)
நபித்தோழர்கள் ஈமான் கொண்டது போல் ஈமான் கொள்வது ஹிதாயத் – நேர்வழிக்கான வழி என இந்த வசனம் கூறுகின்றது. இதன் மூலம் எப்படி ஈமான் கொள்வது என்பதற்கான வழிமுறையை நபித்தோழர்களிடமிருந்து பெற்றுக் கொள்வதை இந்த வசனம் சரிகாண்கின்றது. ஆனால் வழிகேடர்கள் நபித்தோழர்களுக்கு சரியாக ஈமான் கொள்ளத் தெரியாது என்று கூறினால் அதை நாம் உண்மைப்படுத்த முடியுமா?
07. ‘எவர்கள் நம்பிக்கை கொண்டு, ஹிஜ்ரத் செய்து, அல்லாஹ்வின் பாதையில் தங்களது செல்வங்களாலும், தங்களது உயிர்களாலும், அறப்போர் புரிந்தார்களோ அவர்களே அல்லாஹ்விடத்தில் மகத்தான அந்தஸ்துக்குரியவர்கள். மேலும், அவர்கள் தான் வெற்றியாளர்களாவர்’ (9:20)
இந்த வசனம் நபித்தோழர்களை வெற்றியாளர்கள் என்று கூறுகின்றது. இந்த வழிகெட்ட பிரிவினர் அவர்களைத் தோல்வியாளர் களாகக் காட்ட முற்படுகின்றனர். அல்லாஹ் சொல்வதை நம்புவதா? இவர்கள் சொல்வதை நம்புவதா?
08. ‘தமது இல்லங்களையும், தமது செல்வங்களையும் விட்டும் வெளியேற்றப்பட்ட ஏழை முஹாஜிர்களுக்கும் (பங்குண்டு.) அவர்கள் அல்லாஹ்வின் அருளையும் பொருத்தத்தையும் நாடி அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் உதவி செய்கின்றனர். அவர்கள்தாம் உண்மையாளர்கள்’ (59:8)
அவர்கள் உண்மையாளர்கள் என அல்லாஹ் கூறுகின்றான். வழிகேடர்கள் அவர்களைப் பொய்யர்களாகச் சித்தரிக்க முற்படுகின்றனர். இதில் யார் கூறுவதை உண்மைப்படுத்துவது?
09. ‘நிராகரித்தோர், தமது உள்ளங்களில் அறியாமைக்கால வைராக்கியத்தை ஏற்படுத்தியிருந்தபோது, அல்லாஹ் தனது தூதரின் மீதும், நம்பிக்கையாளர்கள் மீதும் தனது அமைதியை இறக்கி வைத்தான். மேலும், பயபக்தியின் வார்த்தையை அவர்களுக்குக் கட்டாயப்படுத்தினான். அவர்கள் அதற்குத் தகுதியுடையவர்களாகவும் அதற்குரியவர்களாகவும் இருந்தனர். அல்லாஹ் யாவற்றையும் நன்கறிந்தவனாக இருக்கின்றான்’ (48:26)
நபித்தோழர்கள் இறையச்சத்திற்குரியவர்கள் என அல்லாஹ் கூறுகின்றான். அவர்கள் தக்வா அற்றவர்கள் என சித்தரிக்க வழிகேடர்கள் முனைகின்றனர். இதில் யார் கூறுவதை உண்மைப்படுத்துவது. அல்லாஹ் கூறுவது உண்மையானால் இவர்கள் பொய்யர்கள் தானே!
10. ‘எவர்கள் நம்பிக்கை கொண்டு, ஹிஜ்ரத் செய்து, அல்லாஹ்வின் பாதையில் தங்களது செல்வங்களாலும், தங்களது உயிர்களாலும், அறப்போர் புரிந்தார்களோ அவர்களே அல்லாஹ்விடத்தில் மகத்தான அந்தஸ்துக்குரியவர்கள். மேலும், அவர்கள் தான் வெற்றியாளர்களாவர்.’
‘அவர்களுக்கு அவர்களது இரட்சகன் தன்னிடமிருந்துள்ள அருளையும், பொருத்தத்தையும், சுவனச் சோலைகளையும் கொண்டு நன்மாராயம் கூறுகின்றான். அவற்றில் அவர்களுக்கு நிலையான இன்பம் உண்டு’ (9:20-21)
அவர்கள் நற்செய்திக்குரியவர்கள் என அல்லாஹ் கூறுகின்றான். அவர்கள் துர்ச் செய்திக்குரியவர்களாக வழிகேடர்கள் கூறுகின்றனர். இதில் யார் கூறுவதை உண்மைப்படுத்துவது.
11. ‘மேலும், முஹாஜிர்கள் மற்றும் அன்ஸாரிகளில் (ஈமான் கொள்வதில்) முதலாமவர்களாக முந்திக் கொண்டோரையும், அவர்களை நல்ல முறையில் பின்பற்றியோரையும் அல்லாஹ் பொருந்திக் கொண்டான். அவர்களும் அவனைப் பொருந்திக் கொண்டனர். அவன் அவர்களுக்குச் சுவனச் சோலைகளைத் தயார் செய்து வைத்துள்ளான். அவற்றின் கீழ் ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும். அதில் அவர்கள் என்றென்றும் நிரந்தரமாக இருப்பார்கள். இதுவே மகத்தான வெற்றியாகும்.’ (9:100)
முஹாஜிர்களையும், அன்சார்களையும் நல்ல முறையில் பின்பற்றுகின்றவர்கள் அல்லாஹ்வால் பொருந்திக் கொள்ளப்படுவார்கள் என இந்த வசனம் கூறுகின்றது. இல்லை, அல்லாஹ் அவர்களைப் பொருந்திக் கொள்ள மாட்டான் என இவர்கள் கூறுகின்றனர். இதில் யார் கூறுவதை உண்மைப்படுத்தப் போகின்றீர்கள்? அல்லாஹ் கூறுவது உண்மை என்றால் இவர்கள் கூறுவது பொய் தானே?
நமது பொறுப்பு:
அவர்கள் தவறு செய்தாலும் மன்னிக்கப்பட்டு விட்டனர். அவர்கள் குறித்து மன்னிப்பின் வாக்கு முந்திவிட்டது என குர்ஆன் கூறுகின்றது.

(பார்க்க: 9:117-118, 8:67-68, 3:152)
எனவே, அவர்கள் இப்படிச் செய்தார்கள், அப்படிச் செய்தார்கள் என விமர்சிப்பது நமது பொறுப்பு அல்ல என்பதை முதலில் நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும். அல்லாஹுத் தஆலா முஹாஜிர்கள், அன்சாரிகள் பற்றிக் கூறிவிட்டு,
‘இவர்களுக்குப் பின் வருவோர், ‘எங்கள் இரட்சகனே! எங்களையும், நம்பிக்கை கொள்வதில் எங்களை முந்திவிட்ட எமது சகோதரர்களையும் மன்னிப்பாயாக! இன்னும், நம்பிக்கை கொண்டோர் குறித்து எமது உள்ளங்களில் குரோதத்தை ஏற்படுத்தி விடாதே! எங்கள் இரட்சகனே! நிச்சயமாக நீ மிக்க மன்னிப்பவனும் நிகரற்ற அன்பு டையவனுமாவாய்’ எனக் கூறுவார்கள்’ (59:10)
அவர்களுக்காக நாம் பாவமன்னிப்புக் கேட்க வேண்டும் என்று கூறுகின்றான். ஈமானில் முந்தி விட்டவர்கள் பற்றி குரோதத்தை ஏற்படுத்தாதே என்று பிரார்த்திக்க வேண்டும் என்கின்றான். அவர்கள் தமக்குள் சண்டை பிடிப்பார்கள் என்பதை அறிந்த அல்லாஹ் தான் அவர்களுக்காக பாவமன்னிப்புக் கோருங்கள் என்று கூறுகின்றான். இதை விட்டு விட்டு அவர்களை விமர்சிப்பவர்களும், அவர்கள் ஈமானில், இபாதத்தில், மார்க்கத்தை விளங்குவதில் நம்மை விடக் குறைந்தவர்கள். அவர்கள் இழிவான குணங்களைக் கொண்டவர்கள் என விமர்சிப்பவர்கள் யாராக இருக்க முடியும்? அவர்கள் பற்றிய குறைவான எண்ணத்தையும் குரோத குணத்தையும் உருவாக்க முனைபவர்கள் ஷைத்தானின் வழியில் செல்பவர்களாகத் தானே இருப்பார்கள்!
நபி(ஸல்) அவர்கள் ஸஹாபாக்களுக்கு அன்பாளராக, அருளாளராக இருந்ததாக குர்ஆன் குறிப்பிடுகின்றது. (9:61, 5:43) இவர்கள் நபித் தோழர்களுக்கு விரோதிகளாகவும், அவர்களை விமர்சிப்பவர்களாகவும் இருக்கின்றனர். இவர்கள் நபிவழி நடப்பவர்களா? நபிவழியைக் கெடுப்பவர்களா?
நபித்தோழர்களுக்காக பாவமன்னிப்புத் தேடும் படி நபியை அல்லாஹ் ஏவுகின்றான். (47:19) ஆனால் இவர்கள் அவர்கள் எங்கேயாவது தப்புத் தவறு செய்துள்ளார்களா? எனத் தேடித் திரிந்து அதைப் பகிரங்கப்படுத்துவதில் அலாதிப் பிரியம் கொள்கின்றனர். இவர்கள் நபிவழி நடப்பவர்களா?
நபிவழி நடப்போம்:
‘அவர்களில் பல தரப்பினருக்கு நாம் வழங்கிய வசதிகளின்பால் உமது இரு கண்களையும் நீர் செலுத்தாதீர். அவர்கள் குறித்து நீர் கவலைப்படவும் வேண்டாம். நம்பிக்கையாளர்களுக்கு உமது (பணிவெனும்) இறக்கையைத் தாழ்த்துவீராக!’ (15:88)
‘நம்பிக்கையாளர்களில் உம்மைப் பின் பற்றுவோருக்கு உமது (பணிவெனும்) இறக்கையைத் தாழ்த்துவீராக!’ (26:215)
இந்த இரு வசனங்களிலும் நபித்தோழர் களுக்கு உமது இறக்கையைத் தாழ்த்துவீராக என அல்லாஹ் நபியை ஏவுகின்றான். இதற்கு மாற்றமாக அவர்கள் விடயத்தில் ஆணவமாகவும் அவர்களை அவமதிக்கும் விதமாகவும் பேசும் எவரும் நேர்வழி பெற்றவர்களாக இருக்க முடியாது என்பதை உறுதியாக விளங்கிக் கொள்ள வேண்டும். அவர்கள் விடயத்தில் பணிவுடன் நடப்பதே நமக்கு ஏவப்பட்ட வழிமுறையாகும். அவர்கள் மீது பழி சுமத்துவோரும், அவர்களைப் பழித்தும், குறைத்தும் பேசுவோரும் பாவிகளே! இத்தகைய இழி குணத்திலிருந்து அல்லாஹ்விடம் பாதுகாவல் தேடுவோமாக!.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.